5 மாநில தேர்தல் : வெற்றி வியூகம் வகுக்க, பாஜக இன்று ஆலோசனைக் கூட்டம்

By 
5 state elections BJP to hold consultative meeting today to formulate victory strategy

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு (2022) தொடக்கத்தில், சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. 

இதில் பஞ்சாப்பை தவிர்த்து, பிற மாநிலங்களில் தற்போது பா.ஜனதா ஆட்சியில் உள்ளது. 

செயற்குழுக் கூட்டம் :

எனவே, அந்த மாநிலங்களில் ஆட்சியை தக்க வைக்கவும், பஞ்சாப்பில் ஆட்சியை கைப்பற்றவும் பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது. 

இதற்கான நடவடிக்கைகளை அந்தந்த மாநிலங்களின் கட்சித்தலைமை ஏற்கனவே தொடங்கி இருக்கிறது.

அதேநேரம், கட்சியின் தேசிய தலைமையும் இந்த மாநில தேர்தல்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. 

இதற்காக, அந்தந்த மாநில தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஏற்கனவே ஆலோசனைகளை நடத்தியுள்ளது.

இந்நிலையில், கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் இன்று டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

வெற்றி வியூகம் :

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள் மற்றும் 124 செயற்குழு உறுப்பினர்கள் என பலர் நேரில் பங்கேற்றுள்ளனர்.

கொரோனா பரவலுக்குப்பின் முதன் முதலில் நடைபெறும் கட்சியின் இந்த உயர்மட்ட கூட்டத்தில், தேசிய நலன் சார்ந்த பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. 

இதில், முக்கியமாக 5 மாநில சட்டசபை தேர்தலில் கட்சியின் வெற்றிக்கான வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. 

மேலும், நாடு முழுவதும் கொரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு இந்த கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.

பின்னடைவு :

நாடு முழுவதும் 13 மாநிலங்களில் சமீபத்தில் நடந்து முடிந்த 29 சட்டசபை இடைத்தேர்தல்களில் கட்சிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டிருந்த நிலையில், இந்த செயற்குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் நடைபெறும் வளாகத்தில், மத்திய அரசின் ஏழை நலன் சார்ந்த திட்டங்கள் குறித்த கண்காட்சியும் நடைபெறுகிறது. 

குறிப்பாக தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் குறித்த தகவல்கள் அதில் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
*

Share this story