நவம்பர் மாதம் காணாமல் போன 520 குழந்தைகள் மீட்பு; குடும்பத்திடம் ஆர்.பி.எஃப் ஒப்படைப்பு..

By 
rpf

காணாமல் போன குழந்தைகளை மீட்பது என்ற நடவடிக்கை மூலம் நடப்பாண்டு நவம்பரில், ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்.பி.எஃப்) 520 க்கும் அதிகமான குழந்தைகளை மீட்டுக் குடும்பத்துடன் சேர்த்துள்ளது.

ரயில்வே சொத்துக்கள், பயணிகளுக்கான வசதிகள் மற்றும் பயணிகளைப் பாதுகாப்பதில் ரயில்வே பாதுகாப்புப் படை உறுதியாக உள்ளது. பயணிகளுக்குப் பாதுகாப்பான மற்றும் வசதியான பயண அனுபவத்தை வழங்குவதற்காக இந்தப் படை 24 மணி நேரமும் பணியாற்றி வருகிறது.

2023ம் ஆண்டு நவம்பரில், ஆர்.பி.எஃப், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியை தொடர்ந்து உறுதி செய்ததுடன், இந்திய ரயில்வே அதன் வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான சரக்குப் போக்குவரத்து சேவைகளை வழங்குவதிலும் உதவியது. அந்த வகையில், 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், அதன் பல செயல்பாடுகளில்  பாராட்டத்தக்க சாதனைகளை ஆர்.பி.எஃப் செய்துள்ளது.

அதன்படி, காணாமல் போன குழந்தைகளை மீட்பது:"நன்ஹேஃபாரிஸ்டே" என்ற நடவடிக்கை மூலம்  பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் 520க்கும் அதிகமான குழந்தைகளை அவர்களின் குடும்பங்களுடன் மீண்டும் ஆர்.பி.எஃப் இணைத்துள்ளது.மீட்கப்பட்ட குழந்தைகள் பல்வேறு காரணங்களுக்காக தங்கள் குடும்பங்களிலிருந்து பிரிந்து வாழ்ந்திருந்தனர். குழந்தைகளை பாதுகாப்பாக மீட்டு அவர்களைக் குடும்பத்துடன் சேர்ப்பதை உறுதி செய்வதில் ஆர்.பி.எஃப் முக்கியப் பங்கு வகித்தது.

அதேபோல், நவம்பர் மாதம் கடத்தல்காரர்களின் பிடியில் இருந்து 35 பேரை ஆர்.பி.எஃப் மீட்டுள்ளது. இந்திய ரயில்வேயில் பல்வேறு நிலைகளில் உள்ள ஆர்.பி.எஃப் இன் மனித கடத்தல் தடுப்பு பிரிவுகள் மனித கடத்தல்காரர்களின் தீய எண்ணங்களை முறியடிக்க அயராது உழைத்ததாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

'ஜீவன் ரக்சா' உயிர்களைக் காப்பாற்றுதல் நடவடிக்கையின் கீழ், நடைமேடைகள் மற்றும் ரயில் தண்டவாளங்களில், ஓடும் ரயில்களில் இறங்கும்போது அல்லது ஏறும்போது தற்செயலாக விழுந்த 224 பயணிகள் நவம்பர் மாதத்தில் பாதுகாப்பாக காப்பற்றப்பட்டனர்.

பெண் பயணிகளின் பாதுகாப்பை தீவிரமாக மேற்கொள்ளும் வகையில் "மேரி சஹேலி" பெண் பயணிகளுக்கு அதிகாரமளித்தல் என்ற முயற்சியை ஆர்.பி.எஃப் தொடங்கியுள்ளது. நடப்பாண்டு நவம்பர் மாதம், 229 "மேரி சஹேலி" குழுக்கள் 13,552 ரயில்களில் பணிகளில் ஈடுபட்டு 410,259 பெண் பயணிகளுக்கு உத்தரவாதமான பாதுகாப்பை அளித்துள்ளன. பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் அத்துமீறி பயணித்த 4618 நபர்கள் மீது ஆர்.பி.எஃப் நடவடிக்கை எடுத்துள்ளது.

இடைத்தரகர்களுக்கு எதிரான நடவடிக்கையில், 392 நபர்களை நவம்பர் மாதம் ஆர்பிஎஃப் கைது செய்து அவர்கள் மீது சட்டப்படி சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், ரூ.42.28 லட்சம் மதிப்புள்ள டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Share this story