9 மாவட்ட சூறாவளி சுற்றுப் பயணம் : நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

By 
9th District Hurricane Tour Edappadi Palanisamy Consultation with Administrators

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 6, 9 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடைபெறுகிறது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவடைந்த நிலையில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றிபெற வைக்க அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இதற்காக 9 மாவட்டங்களுக்கும் சென்று அவர் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். 

சேலம் :

தற்போது சேலத்தில் தங்கி இருக்கும் அவர் நாளை காலை வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற எவ்வாறு பாடுபடுவது என்பது குறித்து, பல்வேறு ஆலோசனைகளை கட்சி நிர்வாகிகளுக்கு எடுத்துச் சொல்லி சிறப்புரை ஆற்றுகிறார்.

மதுரை-தென்காசி :

கூட்டம் முடிந்ததும், நாளை இரவு சென்னை வருகிறார். அதன்பிறகு வெள்ளிக்கிழமை 24-ந் தேதி மதுரை சென்று அங்கிருந்து கார் மூலம் சங்கரன்கோவில் செல்கிறார். 

அங்கு தென்காசி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அந்தக்கூட்டம் முடிந்ததும், திருநெல்வேலி செல்கிறார்.

அங்குள்ள கே.டி.சி.நகர் மாதா மாளிகையில் நெல்லை மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசிக்கிறார். 

இந்த கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற தேவையான ஆலோசனை வழங்குகிறார்.

அவருடன் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி, மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

ஏற்பாடு :

நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா, தென்காசி மாவட்ட செயலாளர்கள் கிருஷ்ண முரளி, செல்வமோகன்தாஸ் பாண்டியன் ஆகியோர் கூட்ட ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர்.

இந்த கூட்டம் முடிந்ததும், சென்னை திரும்பும் எடப்பாடி பழனிசாமி சனிக்கிழமை மாலை காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

அதன்பிறகு திங்கட்கிழமை விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு சென்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். 

9 மாவட்டங்களுக்கும் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று கட்சி நிர்வாகிகளை சந்திக்க உள்ளதால், உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது.

Share this story