எடப்பாடிக்கு காத்திருக்கிறது அரசியல் பேரழிவு : மருது அழகுராஜ்

அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதால், அதனை காரணம் காட்டி ஏற்கனவே கட்சி விதிகளில் கொண்டு வந்த மாற்றத்தை தேர்தல் ஆணையம் பதிவேற்றம் செய்யாமல் உள்ளனர். இது கட்சி பணிகளில் தொய்வு ஏற்படுத்தியுள்ளது.
எனவே, இது தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்துக்கு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனவும் இடைக்கால மனுவில் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் வரும் 12-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ள அரசியல் நிலைப்பாடு தொடர்பாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :
'முதலமைச்சர் பதவியை எடப்பாடிக்கு ஏற்படுத்திக் கொடுத்த சசிகலா, அந்த முதல்வர் அதிகாரத்தை நான்கரை ஆண்டுகள் அனுபவிக்க பூரண ஒத்துழைப்பு கொடுத்த ஓ.பி.எஸ் என மேற்படி இருவருக்கும், தான் இழைத்த துரோகம் தன்னை நிச்சயம் அழித்துவிடும் என்பதை உணர்ந்துகொண்ட எடப்பாடி, வரம் கொடுத்தவர்களின் தலையில் முந்திக் கொண்டு கையை வைத்து முடித்து விடலாம் என படாத பாடுபடுகிறார் .
ஆனால், ஆக்கவும் பாதுகாக்கவும் தெரிந்தவர்களுக்கு அழிக்கவும் தெரியும் என்பதை எடப்பாடிக்கு காலம் உணர்த்தக் காத்திருக்கிறது.
ஆம்...திரி நெருப்பு ஆடுவதும், தீயோர் சிரிப்பதும் முடிந்து போகும் காலத்திற்கு முன்னோட்டம் தான் என்பதை, அவருக்கு வரக் காத்திருக்கும் அரசியல் பேரழிவு நிரூபிக்கும்.
இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.