அதிமுக பொதுக்குழு வழக்கு : தீர்ப்பு என்னவாக இருக்கும்?
 

high court1

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையை நீதிபதி ஜெயச்சந்திரன் திங்கட்கிழமை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த விசாரணையை தொடங்கி 2 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி இருப்பதால், விடுமுறை நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில் விசாரணை நடைபெற உள்ளது. 

இந்த மாதத்தில் வருகிற 9, 15, 19, 31 ஆகிய நாட்கள் அரசு விடுமுறை வருகிறது. 

திங்கட்கிழமை வழக்கு விசாரணை தொடங்கும் போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வக்கீல்கள் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைக்க உள்ளனர். 

இதனால், வழக்கு விசாரணை காரசாரமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதையும் பொதுக்குழு விவரங்களையும் எடப்பாடி பழனிசாமி தரப்பு வக்கீல்கள் கோர்ட்டில் எடுத்துக்கூற உள்ளனர். 

இது செல்லாது என்று ஓ.பி.எஸ். ஆதரவு வக்கீல்கள் வாதிட உள்ளனர். வழக்கு விசாரணை தொடர்ச்சியாக நடைபெற்று 10 நாட்களில் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இதன் மூலம் 20-ந்தேதிக்கு பிறகு அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் ஐகோர்ட்டு புதிய உத்தரவை பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க முடியாது என்று கூறியதை தொடர்ந்து, கடந்த மாதம் 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

ஓ.பன்னீர்செல்வம் அவர் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்தும், கட்சியில் இருந்தும் நீக்கி வைக்கப்பட்டுள்ளார். இதனை எதிர்த்தே ஓ.பி.எஸ். தற்போது முறையிட்டுள்ளார். 

இதனால், இந்த வழக்கை விசாரிக்க போகும் நீதிபதி ஜெயச்சந்திரன் அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் எந்த மாதிரியான தீர்ப்பை வழங்க போகிறார்? என்பது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
*

Share this story