அதிமுக பொதுக்குழு விவகாரம் : இன்று 4-வது நாளாக விசாரணை..

By 
court8

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தபோது அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி அதே கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் பி.வைரமுத்து ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில் கடந்த 6ம் தேதி மூன்றாவது நாளாக நடைபெற்றது. இதில், தலைமை கழக நிர்வாகிகளுக்கு பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் இல்லை. கட்சியின் தலைவர் அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்வு செய்யப்பட வேண்டும் என எம்ஜிஆர் விதிகளை உருவாக்கியுள்ளார். அதை யாராலும் மாற்ற இயலாது. இரட்டை தலைமை காலாவதியாகவில்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொது குழுவை கூட்ட முடியும் என்று ஓபிஎஸ் தரப்பு வாதம் செய்தது.

இதையடுத்து, இருதரப்பு வாதங்களை கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிமுக பொதுக்குழு தொடர்புடைய மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணை இன்றைய (ஜனவரி 10ம் ) தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். அதன்படி, இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அடங்கிய அமர்வு முன்னிலையில் 4வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இன்றைய விசாரணையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதில், 2017ம் ஆண்டு வரை கட்சிக்கு ஒரே தலைமை இருந்தது. அதிமுகவின் பொதுக்குழு, அடிப்படை உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக உள்ளது. கட்சியின் விதிகளை திருத்தவும் அதிகாரத்தை கொண்டுள்ளது.

ஜூன் 23ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை வேண்டுமென பொதுக்குழு உறுப்பினர்களால் விருப்பம் தெரிவிக்கப்பட்டது. இரட்டை தலைமையில் ஏற்பட்ட குழப்பத்தால் கட்சிக்கு மீண்டும் ஒற்றை தலைமை தேவை என்ற நிலை ஏற்பட்டது. பொதுக்குழுவின் முடிவுகளை ஏற்கும் நபரே அடிப்படை உறுப்பினராக இருக்க முடியும் என விதி 7 கூறுகிறது.

பொதுக்குழுவின் முடிவுகள் அடிப்படை உறுப்பினரை கட்டுப்படுத்தும். பொதுக்குழுவே கட்சியில் உட்சபட்ச அதிகாரம் பெற்றது. 1.5 கோடி உறுப்பினர்கள் தொடங்கி, கிளை, நகரம், வட்டம், மாநகரம் ஆகியவற்றுக்கான கட்சி தேர்தலில் வாக்களிக்கின்றனர். ஒவ்வொரு கிளையும் ஒரு செயலாளரை கொண்டுள்ளது.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்காலம் காலாவதியானது போல, பொதுக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் காலாவதியாகவில்லை. அதிமுக ஜனநாயக கட்சியாக இயங்கி வருகிறது. கட்சிக்கு உயர் அதிகாரம் படைத்த குழு தேவை என்று ஈபிஎஸ் தரப்பு வாதிட்டு வருகிறது.

Share this story