'எடப்பாடி இல்லாத அதிமுக' என்றே பொன்விழா ஆண்டில் புதுப்பித்தல் செய்வோம் : ஓபிஎஸ் தரப்பு அதிரடி 
 

marudhu11

அ.தி.மு.க. பொன்விழா ஆண்டை நிறைவு செய்து 51-வது ஆண்டில் நாளை அடியெடுத்து வைக்கிறது. 
இதையொட்டி, சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகம் மின்னொளியில் ஜொலிக்கிறது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.

அ.தி.மு.க.வின் 51-வது ஆண்டு தொடக்க விழாவை கோலாகலமாக கொண்டாடுவது போல், ஒவ்வொரு மாவட்டங்களிலும் கிளை, வார்டு, வட்ட மாவட்ட அளவிலும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து அ.தி.மு.க. கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாரபட்சமற்ற புதுப்பித்தலை பொன்விழா ஆண்டுச் சூளுரையாக கழகம் எடுத்தாக வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக செய்தித் தொடர்பாளருமான கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து சகாப்தம் தொடங்கிய அண்ணா தி.மு.க என்னும் ஆலவிருட்ச இயக்கத்தின் அடிவேரில், எடப்பாடி என்னும் மூடர் கூடம் வெந்நீரை ஊற்றி வேரழிக்கப் பார்க்கிறது.

இதனை தொண்டர்கள் துணையோடு முறியடித்து, ஒற்றுமை எனும் உரமிட்டு, ஒன்றரைக் கோடி சிப்பாய்களின் அப்பழுக்கில்லா கழகச் சொத்தை காப்பாற்ற, அம்மா காட்டிய அடையாளமாம் ஓ.பி.எஸ் போராடி வருகிறார்.

கடந்த நான்கரை ஆண்டுகள் எடப்பாடி நடத்திய கொள்ளை ஆட்சியை வைத்து, கோடான கோடிகளை வாரிச் சுருட்டிய வகையறாக்கள் மட்டுமே, தரைப்பாடியை தாங்கிப் பிடிக்கிறார்கள். 

ஆனால், கொள்கையற்ற கொடநாடு, கொள்ளையர்களது முகத்தைக்கூட பார்ப்பதற்கு தமிழ்நாட்டு மக்களும்  
மனசாட்சி கொண்ட தொண்டர்களும் விருப்பமில்லாமல், அவர்களை அருவருப்போடே பார்க்கிறார்கள்.

எனவே, ஊழல் புரையோடிக் கிடக்கும் அ.தி.மு.க.வை பரிசுத்தப்படுத்த, வெளிப்படையான களையெடுப்பு நடத்தப்பட வேண்டும். 

அது, எடப்பாடி என்னும் முத்திப்போன விஷப்பாம்பிடம் இருந்தே தொடங்க வேண்டும்.  

மேலும், குறுநில மன்னர்கள் போல அ.தி.மு.க. வை அபகரித்துக் கொண்டு, ஆளுக்கட்சியினரோடு திரைமறைவு கூட்டு வைத்து பன்னெடுங்காலமாக, கொள்ளையடித்து பிழைக்கும் பழம் பெருச்சாளி  மாவட்டச் செயலாளர்களை தூக்கி வீசி விட்டு, பல்லாண்டு காலமாக அரசியல் வாய்ப்பற்று கிடக்கும்  
தொண்டு நோக்கம் கொண்ட இளைஞர்களுக்கு அந்த வாய்ப்புகள் தரப்பட வேண்டும். 

இத்தகைய பாரபட்சமற்ற புதுப்பித்தலை பொன்விழா ஆண்டுச் சூளுரையாக கழகம் எடுத்தாக வேண்டும்.

எத்தகைய மாளிகை ஆனாலும் காலத்திற்கு ஏற்ற புதுப்பித்தலை, அது செய்து கொள்ளவில்லை என்றால், அது
பயன்பாட்டுக்கு உதவாத குட்டிச் சுவராகி விடும் என்பதே உண்மை.

எனவே, இந்த இயக்கத்தை இதயத்தில் சுமந்து பிரதிபலன்பாராது அல்லும் பகலும் அயராது உழைத்து வரும் லட்சோப லட்சம் தொண்டர்களின் கனவுக்கு உயிர் கொடுக்க, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் சாமானியன் வடிவத்திலான அவதாரத்தை ஓ.பி.எஸ் எடுக்க வேண்டும்.

இதற்கு புரட்சித் தலைவி அம்மாவின் ஆன்மா நிச்சயம் பக்கத் துணையாக நின்று வழி நடத்தும் என்பது சத்தியம்.

இதனை விரைந்து தொடங்கா விட்டால், கழகத்தை விட்டு விரக்தியோடு தொண்டர்கள் வெளியேறி விடுவார்கள் என்பது நிச்சயம்..

பராமரிப்பு இல்லாத சொத்தை, தங்கள் பெயருக்கு பட்டா மாற்றம் செய்து விடலாம் என்னும் கணக்கை, அநேக கட்சிகள் போட்டு வைத்துக் கொண்டு காத்திருக்கிறார்கள், 

இந்த கள யதார்த்தத்தை புரிந்துகொண்டு, எதிர்கால அரசியல் முன்னெடுக்கப்பட வேண்டும். இதுவே,
கழகமே உலகமென வாழும் தொண்டர்களின் பெரும் விருப்பமாகும்.

இவ்வாறு அதிமுக செய்தித் தொடர்பாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
 

Share this story