அதிமுக அலுவலகத்தில் நுழைய, தொண்டர்களுக்கு அனுமதி மறுப்பு..
 

admk8

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே மோதல் முற்றிய நிலையில் கடந்த மாதம் 11-ந்தேதி ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் தொண்டர்கள் இரண்டு பிரிவாக மோதிக்கொண்டனர். 

பூட்டப்பட்டிருந்த அ.தி.மு.க. தலைமை கழகத்திற்குள் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர். அங்கிருந்த பொருட்கள் சூரையாடப்பட்டது. இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் ராயப்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அதில் ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆட்களும் தலைமை கழகத்தில் புகுந்து பொருட்கள் மற்றும் ஆவணங்களை திருடிக் கொண்டு சென்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து அ.தி.மு.க. அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. 

இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து தலைமை கழகத்துக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது. இதுதொடர்பாக ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் அ.தி.மு.க. அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், ஆகஸ்டு 20-ந்தேதி வரையில் அ.தி.மு.க. அலுவலகத்துக்குள் யாரும் செல்லக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது. 

இதன்படி அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு அ.தி.மு.க. அலுவலகத்துக்குள் யாரும் செல்லாமலேயே இருந்தனர். அங்கு 24 மணிநேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் இந்த தடை நேற்றுடன் முடிவடைந்தது. இதனைத்தொடர்ந்து அ.தி.மு.க. தலைமை கழகத்தினுள் இன்று முதல் கட்சி தொண்டர்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் தங்களது சொந்த ஊர்களில் இருக்கும் நிலையில் அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் திடீர் உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்ற தாக்குதலில் சேதம் அடைந்த பொருட்கள் அப்படியே கிடக்கின்றன. கட்சியினர் உள்ளே நுழைந்தால் இது தொடர்பான ஆதாரங்கள் காணாமல் போக வாய்ப்பு ஏற்படும் என்றும், எனவே கட்சியினர் யாரும் அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு வரவேண்டாம் என்றும் வாய்மொழி உத்தரவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதனால் அ.தி.மு.க. தலைமை கழகத்துக்குள் நுழைவதற்கான கோர்ட்டு தடை விலகிய பிறகும் தொண்டர்களால் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அ.தி.மு.க.வினரோ, அல்லது சமூக விரோத கும்பலை சேர்ந்தவர்களே அ.தி.மு.க. தலைமை கழகத்துக்குள் நுழைந்து விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

தலைமை கழகம் மற்றும் இருபுறம் உள்ள சாலை சந்திப்புகள் உள்ளிட்ட இடங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். 

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை நாளை நடைபெறும் நிலையில், விரைவில் தீர்ப்பு வெளியாக வாய்ப்பும் உள்ளது. அப்போது மீண்டும் அ.தி.மு.க. தலைமை கழகம் முன்பு மோதல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதையும் போலீசார் கருத்தில் கொண்டுள்ளனர். 

இதையடுத்து அ.தி.மு.க.வில் மோதல் விலகி இயல்பு நிலை திரும்பும் வரை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள சென்னை மாநகர காவல் முடிவு செய்துள்ளது.
*

Share this story