அம்பேத்கர் சிலைக்கு விபூதி, குங்குமம் பூசமாட்டேன் : ஐகோர்ட்டில் அர்ஜுன் சம்பத் உறுதி

arjun2

சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அமைப்பினர் அவரது உருவச் சிலைக்கும், படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதையும் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்து மக்கள் கட்சி மாநில செயலாளரான டி.குருமூர்த்தி என்பவர் அம்பேத்கர் படத்தில் காவி உடை அணிவித்து, விபூதி பூசியும், குங்குமம் வைத்தும் கும்பகோணம் முழுவதும் போஸ்டர்களை ஒட்டியுள்ளார்.

இதனை அறிந்த ஒரு சமூகத்தைச் சேர்ந்த கட்சியினர் உடனடியாக போஸ்டர்களை அகற்றாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என போலீசாருக்கு தகவல் அளித்ததையடுத்து, போலீசார் மாற்று உடையில் போஸ்டரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து கும்பகோணத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் போஸ்டர் ஒட்டிய இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் குரு மூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து அம்பேத்கர் சிலைக்கு காவி சட்டை அணிவிக்கமாட்டேன், விபூதி, குங்குமம் பூசமாட்டேன் என சென்னை ஐகோர்ட்டில் அர்ஜுன் சம்பத் உறுதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உத்தரவாத கடிதம் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில், நினைவு தினத்தையொட்டி சென்னை அம்பேத்கர் மணி மண்டபத்தில் மரியாதை செலுத்த வந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.

இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கைது செய்தனர். இதனால் அம்பேத்கர் மணி மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Share this story