வேளாண் நிலங்களை கையகப்படுத்தும் முயற்சி? : திமுக அரசுக்கு, எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் 

epsagri

அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

எனது தலைமையிலான அதிமுக அரசில் தொடங்கப்பட்ட அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் கீழ், அவினாசி சட்டமன்றத் தொகுதியில், அவினாசி மற்றும் அன்னூர் தாலுகாக்களைச் சேர்ந்த கிராமங்களில் உள்ள வேளாண் நிலங்களுக்கும் பாசன வசதி கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

எனவே, இத்திட்டத்தின் காரணமாக தங்களது நிலங்களில் உழவுப் பணிகளை மேற்கொள்ளலாம்; இதன்மூலம் தங்களது வாழ்வாதாரம் மேம்படும் என்று இப்பகுதி விவசாயிகள் எண்ணிக்கொண்டிருந்த நிலையில், 

இந்த திமுக அரசு அவினாசி, அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் தாலுகாக்களில் உள்ள 6 ஊராட்சிகளில், சுமார் 3800 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, டிட்கோ சார்பில் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று 16.8.2021-ல் அரசாணை வெளியிட்டு, 

அப்பகுதி வேளாண் மக்களின் தலையில் இடியை இறக்கியது. உடனடியாக, முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான S.P. வேலுமணி கழகத்தின் சார்பில் வேளாண் நிலங்களில் தொழிற்பேட்டையை அமைத்திட முயலும் இந்த திமுக அரசைக் கண்டித்து,

கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே அறிக்கை வெளியிட்டிருந்தார். தொடர்ந்து அப்பகுதி மக்கள் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் கழகத்தின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர்களும், கழக நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். 

மேலும், கழகத்தின் சார்பில், 2.12.2022 அன்று கோவையில், திமுக அரசின் ஆட்சியில் கோவை மாவட்டம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதைக் கண்டித்தும்,

சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் மற்றும் பால் பொருட்களின் விலை உயர்வு, கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு போன்ற மக்கள் விரோதப் போக்கில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் திமுக அரசைக் கண்டித்து நடைபெற்ற மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் நான் கலந்துகொண்டு பேசியபோது, 

அவினாசி மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக தொழிற்பேட்டைக்கு நிலம் கையகப்படுத்தும் இந்த அரசை கண்டித்துப் பேசினேன். 

மேலும், தொடர்ந்து நிலம் கையகப்படுத்தும் முயற்சிகளில் இந்த அரசு ஈடுபட்டால், பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு ஆதரவாக கழகத்தின் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்தேன். இதன் தொடர்ச்சியாக, விவசாயிகளின் விருப்பம் இல்லாமல் வேளாண் நிலங்கள் கையகப்படுத்தப்பட மாட்டாது என்று திமுக அரசு ஒரு அரசாணையை இந்த வாரம் வெளியிட்டுள்ளது. 

இது, இப்பகுதி விவசாயப் பெருமக்களின் ஒருங்கிணைந்த போராட்டத்திற்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் கிடைத்த வெற்றியாகும். 

விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக, அவர்களது வேளாண் நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் இந்த திமுக அரசு ஈடுபடக்கூடாது என்று வலியுறுத்துகிறேன். 

மேலும், பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு ஆதரவாக என்றென்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் துணை நிற்கும் என்று மீண்டும் ஒருமுறை உறுதியளிக்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Share this story