உலகிற்கே எடுத்துக்காட்டான ஆட்சி : அமித்ஷா பெருமிதம்

By 
amitshah4

சென்னையில் இன்று நடைபெற்று வரும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன பவள விழா நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்துக் கொண்டார். இதற்காக நேற்று டெல்லியில் இருந்து சென்னை வந்தார். 

பின்னர் அமித்ஷா இன்று காலை 11 மணியளவில் ராஜ்பவனில் இருந்து கார் மூலம் புறப்பட்டு வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்திற்கு வந்தார். அங்கு இந்தியா சிமெண்ட்ஸ் 75வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் அமித்ஷா பங்கேற்றுப் பேசினார். 

இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, ஓ.பன்னீர்செல்வம், கிரிக்கெட் வீரர் தோனி உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றியதாவது:- 

இந்தியா சிமெண்ட்ஸ் 75 ஆண்டுகள் நிறைவு செய்ததற்காக அந்நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். 

விளையாட்டு துறையில் கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தபோது எங்கள் நட்பு வளர்ந்தது. விளையாட்டு வீரர்கள் நலன் மற்றும் உயர்வுக்காக பாடுபட்டவர் சீனிவாசன். 

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் மிகப்பெரிய இலக்கை எட்டியுள்ளது. வளர்ச்சி என்பது நாட்டின் கட்டமைப்பை பொறுத்து அளவிடப்படுகிறது. 

தரமான கட்டமைப்புக்கு அடிப்படையானது சிமெண்ட். இந்தியா சிமெண்ட்ஸின் தற்போதைய வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்காற்றியவர் சீனிவாசன். பொருளாதார வளர்ச்சியில் 11வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது. 5வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு செல்ல கட்டமைப்பு மிக முக்கியமானதாக உள்ளது.

வளர்ச்சி அடைந்த நாடுகள் பட்டியலில் 3வது இடத்தை பிடிக்க இந்தியா தீவிரமாக முயன்றுள்ளது. மத்திய பாஜக அரசு பல்வேறு துறைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. 

புதிய தொழில்நுட்பம், கட்டமைப்புகளை உருவாக்க முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. 

ஆய்வு, வளர்ச்சியில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. கொரோனா போன்ற இக்கட்டான நேரத்தில் தடுப்பூசி கண்டுபிடித்து இந்தியா தற்சார்பு நாடாக உயர்ந்தது. 

5 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை 60 கோடி மக்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. 2023-ம் ஆண்டுக்குள் ஜி20 நாடுகள் பட்டியலில் இந்தியா 2ம் நிலையை பிடிக்கும்.

 உலகிற்கு எடுத்துகாட்டாக ஊழலற்ற உன்னதமான ஆட்சியை பாஜக அரசு நடத்தி வருகிறது. தமிழகத்தின் மீது பிரதமர் மோடி கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். 

தமிழகத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்களை கூர்ந்து கவனித்து வருகிறார். தமிழகத்திற்கான வரி பகிர்மானம் 91 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தி வழங்கியுள்ளது. 

சென்னையில் நடைபெறும் 2ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிக்காக சுமார் 3 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

மருத்துவம், பொறியியல் படிப்புகளை தமிழில் படிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
*

Share this story