திமுக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு..

annamalai10

தி.மு.க. தலைமையில் நடைபெறும் தமிழக அரசு தமிழ் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என கூறி தமிழக பா.ஜ.க. சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதன் தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். அதன்படி தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.

கடலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-

தமிழ் மொழி வளர வேண்டும் என்று பா.ஜனதா தலைவர்கள் தமிழகத்தில் போராடி வருகிறார்கள். ஆனால், தி.மு.க.வினர் இநத விஷயத்தில் நாடகமாடி வருகிறார்கள். இதனை மக்கள் மன்றத்தில் கொண்டு வர வேண்டும் என்பதே பா.ஜ.க.வின் நிலையாகும்.

கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு தமிழ் பாடத்தில் 48 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. இதற்கு தி.மு.க. அரசு வெட்கி தலைகுனிய வேண்டும். இதனை பார்க்கும் போது தமிழ்மொழி நாளுக்குநாள் அழிந்து வருகிறது. தரம் தாழ்ந்து வருகிறது.

1960-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் நேரு இந்தி திணிக்கப்படாது என உத்தரவாதம் அளித்திருந்தார். 1965-ம் ஆண்டு இந்தியை திணிப்பதாக கூறி தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தது. இந்தி திணிப்பை கையில் எடுத்தால்தான் ஆட்சிக்கு வரமுடியும் என்று போராட்டம் செய்தனர். 1965-ம் ஆண்டு இந்திக்கு எதிர்ப்பாக போராட்டம் நடத்துவதை பெரியார் கடுமையாக எதிர்த்தார்.

அப்போது பெரியார் கூறுகையில், இந்தி கூடாது என்பதல்ல என்று பேசியுள்ளார். ஆங்கில மொழியை அரசாங்க மொழியாக்க வேண்டும் என்று 1969-ம் ஆண்டு பெரியார் பேசியுள்ளார். 1948-ம் ஆண்டு தமிழை விட ஆங்கிலத்தை கட்டாயமாக்கினால் அவர்களுக்கு ஓட்டுப்போடுவேன் என்று பெரியார் கூறினார்.

தமிழ் என்பது தெய்வீக மொழி. தமிழ் மொழியில் இறையாண்மை, தனாதனம் போன்றவை கொண்டுள்ளது. தமிழ்மொழியை ஊக்குவித்தால் இறைநம்பிக்கை வளர்ந்து விடும். திருவாசகம், தேவாரம் போன்றவற்றை இன்றைய காலத்தில் பெற்றோர் தங்களது பிள்ளைகள் மத்தியில் படிக்க வைத்தால் தமிழும், இறைநம்பிக்கையும், இறைவழிபாடும் வளர்ந்து வரும் என கூறினர்.

ஆனால், தி.மு.க.வினர் தமிழை இறக்கி விட்டு ஆங்கிலத்தை வளர்க்கிறார்கள். தமிழ் மொழிக்காக தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை. இந்தி திணிப்பை தொடர்ந்து ஏற்படுத்துவதாக தி.மு.க.வினர் கூறி வருகிறார்கள். தமிழ் மொழியையும், பா.ஜ.க.வையும் பிரிக்க முடியாது. 1965-ல் இந்தி திணிப்பு போராட்டம் தொடங்கியதால் 1967-ல் தி.மு.க.வினர் எளிதாக ஆட்சியை பிடித்தனர்.

அதேபோன்று இப்போதும் இந்த பிரச்சினையை கையில் தூக்கி உள்ளனர். தமிழ் மொழியில் 48 ஆயிரம் குழந்தைகள் தேர்ச்சி அடையவில்லை. இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும். தோற்று விட்டோம் என கூறி இருக்க வேண்டும். இந்தியை யாரும் திணிக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
 

Share this story