சொல்வதை கேட்க தயாரா? : அண்ணாமலைக்கு, அமைச்சர் சேகர்பாபு சவால்

By 
pks

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை முன் வைக்கும் குற்றச்சாட்டுகள் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் ஆலய பாதுகாப்பை வலியுறுத்தி பா.ஜனதாவினர் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட அண்ணாமலை இந்து சமய அறநிலையத்துறை மீதும், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மீதும் பரபரப்பான குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

அதன் விவரம் வருமாறு:-

* துறைமுகம் தொகுதியில் அமைச்சருக்கு சொந்தமாக பல கட்டிடங்கள் உள்ளன. இதேபோல் குறைந்த வாடகைக்கு விடுவாரா?

* தமிழகத்தில் தேவையற்ற 'ஆணி' அறநிலையத்துறை. பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து அதை கலைப்பதுதான்.

* இந்து கோவில்களை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

அண்ணாமலையின் இந்த குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது இந்த குற்றச்சாட்டுகள் பற்றி அமைச்சர் சேகர் பாபுவிடம் கேட்டபோது ஆவேசமாக பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

போகிற போக்கில் யாராவது சொல்வதை கேட்டு எதையாவது பேசுவது என்ற பாணியில் பேசி வருகிறார். அவர் ஒரு போலீஸ் அதிகாரியாக இருந்தவர். உண்மையை அறிந்து பேசுவதுதான் அவர் ஏற்கனவே வகித்த பதவிக்கும் இப்போது வகிக்கும் தலைவர் பதவிக்கும் அழகு.

அவரது அத்தனை குற்றச்சாட்டுகளையும் மறுக்கிறேன். ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் பதில் அளிக்க கடமைப்பட்டுள்ளேன். கோசாலைகளுக்கு தானமாக கொண்டு வரப்படும் பசுக்களில் கோவில் பயன்பாட்டுக்கு தேவையான பசுக்களை வைத்துக் கொண்டு அதிகமான பசுக்கள் இருந்தால் மாவட்ட கலெக்டரின் அனுமதி பெற்று சுயஉதவிகுழு பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அவர்களுக்கு வழங்கலாம் என்று 2007-ம் ஆண்டில் முடிவு செய்யப்பட்டு அதன்படி வழங்கப்படுகிறது.

அந்த தணிக்கை அறிக்கையை கையில் வைத்துக் கொண்டு தான் எதையோ கண்டுபிடித்து விட்டதை போல் பேசுகிறார். அடுத்து அறநிலையத்துறை கட்டிடங்கள் வாடகை. இது எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது என்ற விதிமுறையை கூட அவர் தெரிந்து கொள்ளாததுதான் வேடிக்கை.

குடியிருப்பு கட்டிடமாக இருந்தால் அரசின் வழிகாட்டு மதிப்பின் அடிப்படையில் 0.1 சதவீதம் வாடகை நிர்ணயிக்கப்படுகிறது. வணிக பயன்பாட்டு கட்டிடமாக இருந்தால் 0.3 சதவீதம் நிர்ணயிக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல வாடகைக்கு விடுவதற்கும் விதிமுறைகள் உள்ளது. யாராவது நேரில் வந்து கேட்டதும் கொடுத்து விடுவதில்லை. முறையாக விளம்பரப்படுத்தி, டெண்டர் விட்டுத்தான் கொடுக்கப்படுகிறது.

அடுத்தது துறைமுகம் தொகுதியில் எனக்கு பல கட்டிடங்கள் இருப்பதான குற்றச்சாட்டு. நெஞ்சை நிமிர்த்தி தலை நிமிர்ந்து சொல்கிறேன். எனக்கோ, என் குடும்பத்தினருக்கோ அப்படி ஏதேனும் கட்டிடங்கள் இருப்பதாக அண்ணாமலை ஆதாரத்துடன் நிரூபித்தால் அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயார். தவறினால் நாங்கள் சொல்வதை அவர் கேட்க வேண்டும். அவர் சொன்னவை தவறு என்று திரும்ப பெற வேண்டும். இந்த சவாலை ஏற்க அவர் தயாரா?

அறநிலையத்துறை உருவாகி 63 ஆண்டுகள் ஆகி விட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு 287 சாமி சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. திருட்டுக்கள் தடுக்கப்பட்டு உள்ளது. வெளிநாடுகளில் இருக்கும் 62 சிலைகள் அடையாளம் காணப்பட்டு உள்ளது. கோவிலை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்றால் யாரிடம் கொடுப்பது? டெண்டரா விட முடியும்?

அவரது பார்வையில் அறநிலையத்துறை தேவையற்ற ஆணியாக தெரிகிறது. ஆட்சிக்கு வந்ததும் பிடுங்கி போடபோகிறாராம். அத்தைக்கு மீசை முளைக்கட்டும் அப்புறம் சித்தப்பா என்று பெயர் வைக்கலாம்.

தமிழ்நாட்டில் பா.ஜனதா ஆட்சிக்கு வரலாம் என்று நினைப்பது பகல் கனவு... கானல் நீர்... கனவில் கூட நடக்காது. அறநிலையத்துறை செய்து வரும் திருப்பணிகள் ஆகட்டும், கோவில்களில் செய்யப்பட்டு வரும் அடிப்படை வசதிகள், பூஜை, புனஸ்காரம், திருத்தேர்கள் பராமரிப்பு, திருக்குளங்கள் சீரமைத்தல், நந்தவனங்கள், பசு மடங்கள் பராமரிப்பு,

அன்னதான திட்டம், நாள் முழுவதும் பிரசாதம் வழங்குவது, ஊழியர்களுக்கு பொங்கல், பண்டிகைக்கு புத்தாடை, அர்ச்சகர்கள் ஓய்வூதியத்தை ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தியது. அரசு சம்பள உயர்வு அறிவிக்கும் போதெல்லாம் திருக்கோவில் ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்குவது.

ஒரு கால பூஜை நடக்கும் 12 ஆயிரத்து 593 கோவில்களின் வைப்பு நிதியில் ரூ.1 லட்சம் சேர்த்தது. 2500 கிராம கோவில்கள் மேம்பாட்டுக்கு ரூ.50 கோடி ஒதுக்கியது. ரூ.3 ஆயிரத்து 934 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. ரூ.1804 கோடி செலவில் 4 ஆயிரம் திருப்பணிகள் நடக்கிறது. 1000 பழமையான கோவில்களை புனரமைக்க ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

இப்படி பக்தர்களும், சாமியும் மகிழும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சியில் அறநிலையத்துறை பணிகள் நடந்து வருகிறது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சொல்லி அசிங்கப்படுவதை அண்ணாமலை தவிர்க்க வேண்டும். இது மல்லாந்து படுத்தபடி காறி உமிழ்வதற்கு சமமானது. இவ்வாறு அவர் கூறினார்.

Share this story