முன்னாள் அமைச்சர் வீடு முன்பு, நடிகை சாந்தினி முற்றுகை-தகராறு; மருத்துவமனையில் அனுமதி..

By 
shandhini

சமுத்திரகனி இயக்கத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான நாடோடிகள் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சாந்தினி. இவர் சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் அளித்திருந்தார்.

அந்தப் புகாரில், என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறிய முன்னாள் அமைச்சர் மணிகண்டன், தன்னை ஏமாற்றிவிட்டார். நாங்கள் இருவரும் ஒரே வீட்டில் கடந்த 5 ஆண்டுகளாகக் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தோம். இந்த காலத்தில் மூன்று முறை நான் கருவுற்றேன். என்னைக் கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்துவிட்டார்" என்று புகார் அளித்திருந்தார்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் - சாந்தினி அதன்பின்னர் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பெங்களூரில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையார் அனைத்து மகளிர் காவல்துறையினர் சைதாப்பேட்டை 11-வது நீதிமன்றத்தில் 351 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மணிகண்டன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபொழுது நடிகை அளித்திருந்த புகாரை அவர் தரப்பு திரும்ப பெற்றுவிட்டதாக கூறப்பட்டது. அதன்பின்னர் மணிகண்டன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து நடிகை சாந்தினி அவருடைய காரில் ராமநாதபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டை முற்றுகையிட முயன்றதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், தன்னை பார்த்து கொள்வேன் என்று கூறியதாலேயே வழக்கை வாபஸ் பெற்றதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது நடிகை சாந்தினிக்கும் மணிகண்டன் ஆதரவாளர்களுக்கும் ஏற்பட்ட தகராறில் சாந்தினிக்கு காலில் காயம் ஏற்பட்டு, மதுரை மாவட்டம் மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

*

Share this story