கோவையில் நடைபெற்ற தாக்குதலுக்கு பின்னால், பெரும் திட்டங்கள் இருந்துள்ளது : கவர்னர் ஆர்.என்.ரவி பரபரப்பு பேச்சு

rnravi

கோவை நவக்கரை பகுதியில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பாரதம் உருவானது. ஆயிரம் ஆண்டுகளாக பாரதத்தின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருகிறது. நவீன அறிவியல் தொழில்நுட்ப கல்வியோடு சேர்த்து பாரத பண்பாடுகளோடு கூடிய கல்வி முறை தேவைப்படுகிறது.

தமிழகம் பல முனிவர்கள், யோகிகளை கொண்டிருந்த மண். யோகாவை உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளது. சிறந்த ஆளுமையால் இந்தியா வழி நடத்தப்பட்டு வருகிறது. யோகாவையும், இயற்கை மருத்துவத்தையும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சனாதன தர்மம் இந்த நாட்டின் அடையாளம். பயங்கரவாதம் நாட்டின் பெரும் பிரச்சினையாக உள்ளது.

பயங்கரவாத தாக்குதல் நாட்டின் வளர்ச்சியை பாதிக்கிறது. பயங்கரவாதம் அனைத்திற்கும் எதிரானதாக உள்ளது. கோவையில் நடைபெற்ற கார் வெடிவிபத்து ஒரு திட்டமிட்ட தாக்குதல். இது பயங்கரவாத தாக்குதல். இதில் அதிக அளவிலான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. கோவையில் நடைபெற்ற தாக்குதல் மிகவும் ஆபத்தானது. இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

கார் வெடிப்பு வழக்கில் தமிழக காவல்துறையின் நடவடிக்கை பாராட்டத்தக்கது. ஆனாலும் தமிழக அரசு கோவை சம்பவத்தை தாமதிக்காமல் உரிய நேரத்தில் என்.ஐ.ஏ. விசாரணைக்கு கொடுத்திருக்க வேண்டும். கோவையில் நடைபெற்ற தாக்குதலுக்கு பின்னால் பெரும் திட்டங்கள் இருந்துள்ளது.

இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு நாம் தக்க பதிலடி கொடுக்க வேண்டும். இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. மேலும் பெருவளர்ச்சியை நோக்கமாக கொண்டு செல்கிறோம். ஆனால் பயங்கரவாத தாக்குதல் வளர்ச்சியை தடுக்கும் விதமாக உள்ளது. பயங்கரவாதத்தை உருவாக்கக் கூடிய இடமாக கோவை உள்ளது கவலையளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
 

Share this story