இரு தரப்பு ஒப்பந்தமும், எடப்பாடி நிர்ப்பந்தமும் : மருது அழகுராஜ்

'எடப்பாடி மற்றும் தி.மு.க. இடையிலான இருதரப்பு புரிந்துணர்வை, போகப் போக தொண்டர்கள் புரிந்துகொள்வார்கள். அப்போது, மிச்சமீதமில்லாமல் அ.தி.மு.க.விலிருந்து எடப்பாடி துடைத்தெறியப்படுவார்' என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :
தி.மு.க.வின் இந்த ஏறத்தாழ இரண்டாண்டு கால ஆட்சியில், எடப்பாடிக்கு ஏற்பட்ட இன்னல்-துயரம் ஏதாவது உண்டா..?
கொடநாடு விவகாரம், 4500கோடி நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு என எதிலும் உறுதியான நடவடிக்கைகள் இதுவரை இல்லை.
காரணம்.. பா.ஜ.க.மற்றும் ஓ.பி.எஸ் ஆகியோரது அறிவுறுத்தலுக்கு செவிமடுக்காமல், புதிய தமிழகம் தே.மு.தி.க. அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகளை அன்று கூட்டணிக்குள் கொண்டு வராமல், தோற்போம் எனத் தெரிந்தும் பலவீனமான கூட்டணியை அமைத்து.. கடந்த சட்டமன்ற தேர்தலில் திட்டமிட்டே தி.மு.க. வை ஆட்சிக்கு வரவிட்டதே எடப்பாடிதான்.
அதற்கு நன்றிக் கடனாக, எடப்பாடி மற்றும் அவரது மணியான வகையறாக்கள் மீதான ஊழல் விவகாரங்களை கிடப்பில் போடுவதும், உதாரணத்திற்கு (இரண்டு லட்சம் டன் நிலக்கரி காணாமல் போனது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்த கொள்ளை போன்ற பல விவகாரங்கள்..)
இதற்கு கைமாறாக, அ.தி.மு.க.வை தொடர்ந்து பிளவுக்குள்ளாக்கி, அதன்மூலம் தமிழ் நாட்டில் பா.ஜ.க.வை வேரூன்ற விடாமல் தடுப்பதும்..
கூடவே, 2024 நாடாளுமன்ற தேர்தல்.. அதைத் தொடர்ந்து 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு வழி விடுவது..
குறிப்பாக, உதயநிதிக்கு முதல் அமைச்சர் பட்டாபிஷேகம் நடத்த உதவுவது என்னும் திரைமறைவு ஒப்பந்தம் மேற்படி இருதரப்பிலும் ரகசியமாகவே போடப்பட்டிருக்கிறது.
இதற்கு பிரதிபலனாக, வழக்குகளில் இருந்து எடப்பாடியை காப்பாற்றுவது மட்டுமன்றி, தி.மு.க.வுக்கு பிரதான எதிரி ஈ.பி.எஸ் தான் என்பது போன்ற மாயையை உருவாக்க எடப்பாடிக்கு தி.மு.க.உதவுவது என்பது தான், எடப்பாடி மற்றும் தி.மு.க.இடையிலான இருதரப்பு புரிந்துணர்வு என்பதை போகப் போக தொண்டர்கள் புரிந்துகொள்வார்கள்.
இந்த குட்டு வெளிப்பட்டு விடாமல், திரைபோட்டு மறைக்கும் முயற்சிதான் திமுக ஆட்சிக்கு எதிராக எடப்பாடி அறிவிக்கும் கண்துடைப்பு தெருக்கூத்து ஆர்ப்பாட்டங்களாகும்.
இந்த புரிதல்.. ஓர் நாள் உச்சத்தை அடையும்போது, மிச்சமீதமில்லாமல் அ.தி.மு.க.விலிருந்து எடப்பாடி துடைத்தெறியப்படுவார் என்பது நிச்சயம்.
இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.