கழகத்தை காக்கும் கடைக்கோடி சிங்கங்களின் ரோமத்தைக்கூட, ரொக்கத்தால் வாங்க முடியாது : ஈபிஎஸ் மீது ஓபிஎஸ் தரப்பு கடும் தாக்கு 

By 
marudhu12

சட்டசபையின் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் முடிந்த பிறகு, சபாநாயகர் அப்பாவுவிடம், செய்தியாளர்கள்,' எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி குறித்து பிரச்சினை ஏற்பட்டுள்ளதே? எந்த அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம் எதிர்க்கட்சி துணைத்தலைவராக நீடிக்கிறார்? என கேள்வி எழுப்பினர்.

இதற்கு அவர்,' இந்த விவகாரம் தொடர்பாகத்தான் 6 கடிதங்கள் வந்துள்ளதாக தெரிவித்தேன். இந்த கடிதங்களுக்கு எல்லாம் சட்டமன்றம் நடப்பதால், சட்டமன்றத்தில் தான் அதற்குரிய பதிலை சபாநாயகர் கூற முடியுமே தவிர, பொதுவெளியில் பேட்டியில் சொல்ல எனக்கு விருப்பமில்லை. அது பொருத்தமாக இருக்காது.

இதுதொடர்பாக, சட்டசபையில் கேள்வி எழுப்பப்பட்டால், அங்கு நான் பதில் சொல்வேன். எனவே, இப்போது சட்டமன்றம் நடக்கும்போது, இதற்குரிய பதிலை நான் வெளியில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை ' என தெரிவித்தார்.

சட்டசபைக் கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபைக் கூட்டம் முடிந்ததும், செய்தியாளர்களிடம் கூறியதாவது : 

அ.தி.மு.க. சட்டவிதிகளை திருத்தியதை எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது. ஜனநாயக கடமையாற்ற நான் சட்டமன்றத்திற்கு வந்தேன். சட்டமன்ற இருக்கைகள் மாற்றப்படாமல் உள்ளது குறித்து, கடிதம் எழுதியவர்களிடம் தான் நீங்கள் கேட்கவேண்டும். அலுவல் ஆய்வுக்குழுவில் சபாநாயகர் எடுக்கும் முடிவுகளுக்கு நான் கட்டுப்படுவேன்.

சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக என்னை அங்கீகாரம் செய்துள்ளதை பாசிட்டிவ் ஆக பார்க்கிறேன். அ.தி.மு.க. இரு பெரும் தலைவர்கள் எளிய தொண்டனும் தலைவராக வேண்டும் என்ற விதியை வைத்திருந்தனர். இந்த விதியை யாரும் மாற்ற முடியாது. ஆனால் தற்போது விதிகள் மாற்றப் பட்டுள்ளன.

தலைமை பதவிக்கு வர 10 மாவட்ட செயலாளர்கள் முன் மொழிய வேண்டும். 10 மாவட்ட செயலாளர்கள் வழி மொழிய வேண்டும். 5 ஆண்டுகள் தலைமைக் கழக நிர்வாகிகளாக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இது 1.5 கோடி தொண்டர்கள் மனதிலும் நீங்காத வடுவாக உள்ளது. இந்த மாற்றங்களை செய்தவர்களை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது.

பேரவை தலைவர் அறிவிப்பின் அடிப்படையில், பேரவை கூட்டத்தில், பங்கேற்றுள்ளேன். அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் நிறைவேற்றும் தீர்மானங்களை ஒருமனதாக ஏற்றுக்கொள்கிறோம்.

அ.தி.மு.க. தொண்டர்கள் இயக்கம். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு16 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியை ஜெயலலிதா நடத்தினார். இரு தலைவர்கள் அ.தி.மு.க.வுக்கு செய்த தியாகம், அடிப்படை தொண்டர்கள் ரத்தம் சிந்தி உழைத்தது இந்த இயக்கம். எம்.ஜி.ஆர். உருவாக்கி ஜெயலலிதா காப்பாற்றிய அ.தி.மு.க. சட்ட விதியை மாசுபடாமல் காப்பாற்றும் நிலையில் உள்ளோம். அதற்கு அச்சுறுத்தல் வந்தாலும், கட்டி காப்பாற்றும் நிலையில்தான் நாங்கள் உள்ளோம்.

அ.தி.மு.க. சட்ட விதி அபாயகரமான சூழலாகும். இது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எண்ணத்திற்கு மாறுபட்டது' என்றார்.

இந்நிலையில், இது தொடர்பாக,  ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக செய்தித் தொடர்பாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

தி.மு.க தயவோடு எதிர்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் ஓ.பி.எஸ் உட்காரலாமா என்று தரைப்பாடி தரப்பு  தவில் அடிச்சு திரியுது.

திமுகவின் திரைமறைவு உறவோடு கொடநாடு கொலை கொள்ளை வழக்கு முதல், சம்பந்தி மீதான டெண்டர் முறைகேடு விவகாரம் வரை, தானும் தப்பித்து தன்னோட கொள்ளைக் கூட்டத்தையும் ரெய்டுக்கு மேல் எதுவும் நடக்காம, தப்பிக்க வைக்க  கட்டப் பஞ்சாயத்துகளை கடல்கடந்து நடத்துவதும் காலில் விழ அலைவதும் குத்துக் கோல் கும்பல் தான்.

ஆனால், ஓ.பி.எஸ்  எப்போதும் உரிமையை உரியவர்களிடம் நெஞ்சு நிமிர்த்தி  பெறுபவரே தவிர, கொள்ளை அடித்த பணத்தைக் கொண்டு அதிகாரத்தை கொள்முதல் செய்ய அலைகிறவர் அல்ல.

பெருமைகள் எப்போதும் பெரிய குளத்து பெரிய மனத்தாரை தேடிவந்து கிடைத்தது தான் வரலாறு.

இதனை ஓ.பி.எஸ்ஸின் காலில் விழுந்து முதலமைச்சர் வேட்பாளர் வாய்ப்பு முதல், எதிர்கட்சித் தலைவர் பதவி வரை, இனாம் வாங்கிப் போன இடையூறுக் காலத்திடமே கேட்டுத் தெரிஞ்சிக்கலாம்..

அதனால, பாராளுமன்ற சபாநாயகர் தொடங்கி, தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு வரை அனைரிடமும் அவமானப்படுகிற தவழ்ந்தசாமி எடுப்புகள் தங்களை திருத்திக் கொள்வது நல்லது.

எதிர் கருத்துகளை கண்ணியத்துடன் முன் வைக்க வேண்டும். எடப்பாடி வேண்டுகோளாம்; எப்படி..

பொறுக்கிகளை பொதுக்குழு உறுப்பினர்கள் என்று திரட்டி வைத்துக்கொண்டு, அச்சில் ஏற்ற முடியாத ஆபாச சொற்களால் தன் கட்சித் தலைவர் முதல், அவரது தாயை வரை விமர்சிக்க விட்டு,  அதனை ஓரக்கண்ணால் ரசித்த உத்தமன் எடப்பாடி கண்ணியம் என்றெல்லாம் கதா கலாட்சேபம் நடத்தலாமா?

தரையை நக்கிப் பெற்ற முதல்வர் பதவியில் உட்கார்ந்து கொண்டு, பதவி தந்தவரையே நாய் என்று விமர்சித்த பழைய வெல்லம் உருட்டியின் நாக்கு.. நாகரீகம் போதிக்கலாமா.?

பச்சோந்தி என்று பழி போட்டு, உன்னை நினைத்துக் கொண்டு ஓ.பி.எஸ்ஸை திட்டிய கண்ணியம், பழனிசாமி புண்ணியம் போதிக்கலாமா.?

அதனால் மிஸ்டர் குத்துக் கோல்.. தங்கத்தை தரம் பார்த்து சொல்லனும்னா, நாம முதலில் உரைகல்லாக இருக்க வேண்டும்.

அவ்வாறு இல்லாமல், துருப்பிடித்த தகரத்திலும் கீழாக இருந்துகொண்டு கண்ணியம் புண்ணியம் என்றெல்லாம் ஊருக்கு உபன்யாசம் செய்யப்புடாது.

இவ்வாறு அதிமுக செய்தித் தொடர்பாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

*

Share this story