நரியின் பிடியும், நன்றிக்கடனும் : ஓபிஎஸ் தரப்பு முழக்கம் 

By 
marudhu64

'சாதி, மதம், இனம், மண்டலம் என அடுக்கடுக்கான பிளவுகளுக்கு அடிகோலிடும் எடப்பாடியின் அதிகாரப் பித்திலிருந்து கழகத்தை பொத்திப் பாதுகாத்திட, ஈரிலை பக்தர்கள் ஓ.பி.எஸ் தலைமையில் ஒன்றாகுதல் வேண்டும்' என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் முழங்கியுள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

மூன்று முறை செங்கோல் ஏந்திய ஒரு மூத்த தலைவரையே, தன்னிடம் வகை தொகை இல்லாது குவிந்து கிடக்கும் பணத்தைக்கொண்டு அழித்து விடுவேன் என ஆணவம் கொண்டு அலைகிற ஒரு மனநோயாளியின் கைகளில் கட்சி அகப்பட்டால், அங்கே ஜனநாயகம் இருக்குமா? என்பதை எண்ணிப் பார்க்காத ஒரு ஜால்ரா கூட்டம், தவழ்ந்தசாமிக்கு தடுக்கு விரித்து திரிகிறது.

இதன் விளைவாக அ.தி.மு.க. என்கிற மகோன்னத இயக்கத்தை நீதிமன்றங்களும், மத்தியில் அதிகாரத்தில் உள்ள மாற்றுக் கட்சியும் தான் தீர்மானிக்க முடியும் என்கிற தலைக்குனிவுச் சூழல் உருவாகியிருக்கிறது.

எடப்பாடியிடம் தான் சுடச்சுட கரன்சி  இருக்கிறது என்பதை தவிர, வேறு எத்தகைய பிரத்யேக தகுதியும் இல்லாத ஒரு பிற்போக்குவாதியை, பொது அறிவும் பொதுவாகவே அறிவும் அற்ற ஒரு தற்குறியை, குற்றரேகைகள் படிந்த சந்தேகத்திற்குரியவரை..
 
அண்ணா திமுக என்னும் நாடு போற்றுகிற பொன் விழா கண்ட ஒரு திராவிட இயக்கத்தின் தலைமைக்கு தேர்வு செய்தால்.. அது பெட்ரோலை தலையில் ஊற்றிக் கொண்டு தீக்குழி இறங்குவதற்கு சமமாகும்.

ஒரு ஹீரோ துவங்கிய இயக்கம்.. ஒரு ஹீரோயின் வாகை  வழி நடத்திய வரலாற்றுக்கு உரிய அமைப்பு..
ஒரு சர்வாதிகார சிந்தனை கொண்ட  சீக்காளியிடம் சீக்கிவிடக் கூடாது.

இந்த  அபாயத்தை தடுத்திட ,மக்கள் திலகத்தின் மாசற்ற தொண்டர்களும் மகராசி அம்மாவின் மகத்தான சிப்பாய்களும், எடப்பாடியின் அரசியல் அபகரிப்பு முயற்சியை முறியடிக்க அணிதிரள வேண்டும்.

சாதி, மதம், இனம், மண்டலம் என அடுக்கடுக்கான பிளவுகளுக்கு அடிகோலிடும் எடப்பாடியின் அதிகாரப் பித்திலிருந்து கழகத்தை பொத்திப் பாதுகாத்திட, ஈரிலை பக்தர்கள் ஓ.பி.எஸ் தலைமையில் ஒன்றாகுதல் வேண்டும். 

இது ஒன்றே.. தனதுஆயுளையே அர்ப்பணித்துப் போன புரட்சித்தலைவி அம்மாவுக்கு நாம் காட்டும் நன்றிக் கடனாகும்.

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
 

Share this story