முதலமைச்சர் ஸ்டாலின்-மம்தா பானர்ஜி சந்திப்பு; பேசியது என்ன?

mamata3

மேற்கு வங்காள கவர்னர் (பொறுப்பு) இல.கணேசனின் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி இன்று சென்னை வந்துள்ளார். சென்னை வந்துள்ள மம்தா பானர்ஜி ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு சென்றார். அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பிற்கு பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பல முறை சென்னைக்கு வந்துள்ளார். மேற்குவங்காள பொறுப்பு கவர்னராக இருக்கக்கூடிய இல.கணேசன் இல்லத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க மம்தா பானர்ஜி சென்னைக்கு வந்திருக்கக்கூடிய சூழ்நிலையில் மரியாதை நிமித்தமாக என்னுடைய இல்லத்திற்கு வருகை தந்து என்னை சந்தித்துள்ளார்.

அதேநேரத்தில் நீங்கள் அவசியம் மேற்குவங்காளத்திற்கு என்னுடைய விருந்தினராக வர வேண்டும் என்று மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். அந்த அழைப்பை நான் ஏற்றுக்கொண்டுள்ளேன். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான்... தேர்தல் சந்திப்பு அல்ல...

தேர்தல் குறித்து எதுவும் பேசவில்லை. அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. எனவே, மரியாதை நிமித்தமான சந்திப்பிற்காகவே வந்தாரே தவிர வேறு எதற்கும் அல்ல. இது குறித்து அவரே (மம்தா பானர்ஜி) கூறுவார். இவ்வாறு அவர் பேசினார்.

இதனை தொடர்ந்து மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது:-

மு.க.ஸ்டாலின் எனது சகோதரர் போன்றவர். நான் தனிப்பட்ட முறையில் அவரை சந்தித்தேன். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. எனது மாநில கவர்னர் என்னை அவரது இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி வேண்டுகோள் விடுத்த நிலையில் அதற்காக நான் சென்னை வந்தேன்.

இந்த சந்திப்பு நிகழ்ச்சி ஏற்கனவே திட்டமிடப்படவில்லை. ஆனால், ஸ்டாலினை சந்திக்காமல் சென்னையில் இருந்து நான் எவ்வாறு செல்வது? ஆகையால், மு.க.ஸ்டாலினை சந்திப்பது எனது கடமையாக நான் கருதுகிறேன். அவருடன் ஒரு கோப்பை தேநீர் குடிப்பது எனது கடமை.

சென்னையில் மிகவும் பிரபலமானது என்ன? தேநீர் குடிப்பது..

 இரு அரசியல் தலைவர்கள் சந்திக்கும்போது, அரசியல் அல்லாத மக்களின் நலன் சார்ந்த, வளர்ச்சி மற்றும் பிற விஷயங்கள் குறித்து பேசினோம். அரசியல் குறித்து பேசவில்லை. அரசியலை விட வளர்ச்சி மிகப்பெரியது என்று நான் நினைக்கிறேன்.

நான் எந்த ஒரு அரசியல் கட்சி குறித்தும் கருத்து தெரிவிக்கமாட்டேன். கவர்னர் விவகாரம் குறித்து நாங்கள் ஆலோசிக்கவில்லை. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பு தனிப்பட்ட மற்றும் மரியாதை நிமித்தமான, சகோதர - சகோதரி முறையிலான சந்திப்பு. இது அரசியல் ரீதியிலான? சமூக ரீதியிலான? கலாச்சார ரீதியிலான? சந்திப்பா என நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள். இது அனைத்தையும் சார்ந்த சந்திப்பு. இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.

Share this story