ஜெயலலிதா நினைவிடம் நோக்கி வாருங்கள் : தொண்டர்களுக்கு ஓபிஎஸ் அழைப்பு 

By 
opsspeech1

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவுநாள் அமைதி பேரணியை பிரம்மாண்டமாக நடத்துவது குறித்து மாவட்ட செயலாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சென்னை கீரின்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கு.ப.கிருஷ்ணன், ஜேசிடி பிரபாகர் அமைப்பு செயலாளர் நாஞ்சில் கோலப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், வரும் டிசம்பர் 5-ந்தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவை போற்றும் வகையில் அமைதி பேரணியும் உறுதியேற்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

கழக தொண்டர்களும் மக்களும் நம் பக்கம் தான் என்பது உறுதியாக இருந்தாலும் அதை நிரூபிக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. வருகிற 5-ந்தேதி காலை 9 மணிக்கு ஜெயலலிதாவின் நினைவை போற்றும் வகையில் நடைபெறும் அமைதி பேரணியில் ஆயிரமாயிரமாய் திரண்டு வர வேண்டும்.

கழகமும் மக்களும் நம் பக்கம் தான் என்பதை மக்கள் மன்றத்திற்கு உணர்த்த வேண்டும். லட்சக்கணக்கில் அணி திரண்டு வருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஒரு கூட்டம் வெள்ளிக்காசுகளை அள்ளி இறைத்துக்கொண்டிருக்கிறது.

நாம் மட்டும் தான் அமைதியாக செயல்பட்டு, அனைத்து வகையிலும் வெற்றி வாய்ப்பை வெல்லப்போகிறோம். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
 

Share this story