நடிகர் பாலகிருஷ்ணாவை கண்டுபிடித்து தருமாறு போலீசில் புகார்..

By 
bk1

ஆந்திர மாநிலம் இந்துபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் நடிகர் பாலகிருஷ்ணா. இவர் மீது தொகுதியை சரியாக கவனிக்கவில்லை அவர் தொகுதி பக்கம் எட்டிப் பார்க்கவே இல்லை எனவே காணாமல் போன அவரை கண்டுபிடித்து தருமாறு பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்துபுரம் தொகுதியிலிருந்து தெலுங்கு தேசம் கட்சி சார்பில் சட்டமன்றத்திற்கு 2 முறை நடிகர் பாலகிருஷ்ணா தேர்வாகி உள்ளார். இந்தநிலையில் தொகுதி மக்களின் நலனுக்கு எதுவும் செய்யவில்லை என்று பீமவரம் போலீஸ் நிலையத்தில் இவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் நந்தமூரி பாலகிருஷ்ணனா தனது 14 வயதிலிருந்தே சினிமா துறையில் நடித்து வருகிறார். 1980களிலிருந்து இவர் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். தற்போதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இருப்பினும் இவர் அரசியல்வாதியாகவும் திகழ்ந்து வருகிறார்.

தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து கட்சியின் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். இவ்வாறு இருக்கையில், அவர் மீது உள்ள நம்பிக்கையில் அந்த தொகுதி மக்கள் கடந்த 2 முறையும் இந்துபுரம் தொகுதியின் எம்எல்ஏவாக அவரை தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால் இவர் தொகுதி பக்கம் வருவதே இல்லையென்று அடிக்கடி சொல்லப்பட்டு வந்தது.

இதன் தொடர்ச்சியாக தற்போது போலீஸ் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. அதில், 2 முறை எம்.எல்.ஏ-வாக உள்ள அவர் தொகுதியை சரியாக கவனிப்பதில்லை. தொகுதி பிரச்னைகளுக்கு தீர்வு காணவில்லை. எனவே அவரை கண்டுபிடித்து தரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தொடக்கத்தில் சினிமா பணிகளில் மும்முரமாக இருப்பதால்தான் தொகுதி பக்கம் வரமுடியவில்லை என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது 2-வது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்வாகியும் தொகுதியில் நிலவும் பிரச்னை மீது அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

பாலகிருஷ்ணாவுக்கு அரசியல் பழக்கப்படாமல் இல்லை. அவருடைய தந்தை என்.டி.ராமா ராவ் ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக பணியாற்றியுள்ளார். எனவே பாலகிருஷ்ணா அரசியல் பின்னணியிலிருந்து தான் வந்துள்ளார். இப்படி இருக்கையில் இந்த புகார்கள் அவரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக அளிக்கப்பட்டுள்ளது என்று அவரது ரசிகர் மன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகார் யாரோ சிலரின் தூண்டுதலின் பெயரிலேயே கொடுக்கப்பட்டுள்ளது என்றும் ரசிகர் மன்றத்தினர் தெரிவித்துள்ளனர். எப்படியாயினும் தொகுதியில் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Share this story