ஊழல் வழக்கு : முதலமைச்சர் மகளுக்கு சி.பி.ஐ. நோட்டீஸ்..

By 
kavitha

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லியில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்துவதில் ஊழல் நடைபெற்றதாகவும், இந்த ஊழல் பணம் பல்வேறு அரசியல் தலைவர்கள் இடையே கைமாறியதாகவும் புகார் எழுந்தது.

இந்த வழக்கை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆம்ஆத்மி கட்சியின் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மீது அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து கடந்த 30-ந் தேதி அவரை கைது செய்தனர்.

மேலும் அவரது வீடு, அவருக்கு தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை நடத்தி ரூ.2.82 கோடி ரொக்கப்பணம் மற்றும் 1.80 கிலோ தங்கம் ஆகியவற்றை கைப்பற்றினர்.

இந்நிலையில் இந்த வழக்கில் தெலங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகள் கவிதா விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளார். மதுபான ஊழல் தொடர்பாக டெல்லியில் தொழிலதிபர் அமித்அரோரா சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவர் அளித்த வாக்குமூலத்தில் சவுத் குரூப் என்ற நிறுவனம் மூலம் ஆம்ஆத்மி தலைவர்களுக்கு ரூ.100 கோடி லஞ்சம் தரப்பட்டதாக கூறியுள்ளார்.

இந்த சவுத்குரூப் நிறுவனத்தை சரத்ரெட்டி, கவிதா, மகுந்தாரெட்டி ஆகியோர் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். கவிதா தற்போது டி.ஆர்.எஸ்.கட்சியின் எம்.எல்.சி.யாவும் உள்ளார்.

இந்நிலையில் மதுபான ஊழல் தொடர்பாக விசாரணை நடத்த கவிதாவுக்கு வருகிற 6-ந் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சி.பி.ஐ. நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதுதொடர்பாக சி.பி.ஐ. துணைகண்காணிப்பாளர் அலோக் குமார் ஷாஜி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த ஜூலை 27-ந் தேதி உள்துறை இயக்குனர் பிரவின்குமார் ராயிடம் இருந்து எழுத்து பூர்வமாக ஒரு புகார் வந்தது.

அதன் அடிப்படையில் டெல்லி அரசின் கலால் கொள்கை தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ்சி சோடியா மற்றும் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது சில தகவல்கள் கிடைத்துள்ளன. இதுதொடர்பான மேல் விசாரணைக்காக வருகிற 6-ந் தேதி காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கவிதா தரப்பிலும், ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 160-வது பிரிவின் கீழ் என்னிடம் விளக்கம் கேட்டு சி.பி.ஐ. நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அதன்படி வருகிற 6-ந் தேதி ஐதராபாத்தில் உள்ள எனது இல்லத்தில் அவர்களை சந்திக்கலாம் என்று அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன் என கூறப்பட்டுள்ளது. மேலும் எந்த விசாரணையையும் எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். அமலாக்கத்துறை என எந்த அமைப்புகள் கேள்விகள் கேட்டாலும் அதற்கு பதில் சொல்ல தயாராக உள்ளேன் என கவிதா கூறியுள்ளார்.

Share this story