பட்டின பிரவேசத்திற்கு தடை போட, திமுகவுக்கு அதிகாரம் இல்லை : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

By 
stalin-edappadi

தமிழக சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த பின், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது :

விக்னேஷ் மரணம் தொடர்பான வழக்கு நேர்மையாக நியாயமாக நடைபெற வேண்டுமானால், சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தினோம். 

ஆனால் முதலமைச்சர், சிபிசிஐடி விசாரணை நடக்கும் என்று தெரிவித்ததால் வெளிநடப்பு செய்தோம்.

தருமபுரம் ஆதீனத்தில் 500 ஆண்டுகளுக்கு மேலாக பட்டின பிரவேசம் நடந்து வருகிறது. அதற்கு தடை விதித்திருக்கிறார்கள். அது ஆன்மீகம் சார்ந்தது. 

திமுக அரசு, அவர்களை பழிவாங்கும் நோக்கத்துடன் அதை தடை செய்திருக்கிறார்கள். ஆதீன எல்லைக்குள் தான்  நடக்கிறது. இதை தடை செய்யவே அவர்களுக்கு அதிகாரம் இல்லை. 

இருப்பினும், வேண்டுமென்றே திட்டமிட்டு சில அரசியல் காரணங்களுக்காக, இந்த பட்டின பிரசேத்திற்கு மாவட்ட வருவாய்த்துறை தடை விதித்திருப்பது கண்டிக்கத்தக்கது. ஆன்மீகத்தில் இந்த அரசு தலையிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது. 

முதலமைச்சர் அனைவருக்கும் பொதுவானவர். எங்கள் உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன் சட்டமன்றத்தில் பேசியபோது தனது கருத்தை சொன்னார்.

‘முதலமைச்சர் பொதுவானவர். எல்லா மதத்திற்கும் சமமானவர். பல்வேறு மதங்களுக்கு பண்டிகைகளுக்கும், திருவிழாக்களுக்கும்  வாழ்த்து சொல்லிக்கொண்டிருக்கிறார். 

ஆனால், ஆனால் தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாதது ஏன்?’ என்று அவர் குறிப்பிட்டார். உடனே, அதை அவைக்குறிப்பில் இருந்து சட்டப்பேரவை தலைவர் நீக்கிவிட்டார். 

நான் அது குறித்து மீண்டும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். ஆகவே, முதலமைச்சர் என்பவர் பொதுவானவர். அவர் எந்த கட்சியையும் சாராதவர். எந்த மதத்திற்கும் சாராதவர். 

பல்வேறு மதத்தினைச் சார்ந்தவர்களுக்கு பண்டிகை நாட்களிலும், திருவிழா நாட்களிலும் வாழ்த்து சொல்லும்போது, ஏன் தீபாவளிக்கு வாழ்த்து சொல்லவில்லை? என்ற கேள்வி எழுப்பினோம். ஆனால், அதற்கு பதில் கிடைக்கவில்லை. 

எனவே, முதலமைச்சர் அனைவருக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம், கோரிக்கை ஆகும். அதுதான் மக்களுடைய எண்ணமும். 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்துவிட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது. 

திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டு ஏற்படுகிறது. அதிமுக ஆட்சியில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது' என்றார்.
*

Share this story