திமுக நிர்வாகிகளை கைது செய்து, சிறையில் அடைப்பு..
 

arrest3

சென்னை சாலிகிராமம் தசரதபுரம் பஸ்நிலையம் அருகே கடந்த 31-ந்தேதி இரவு மறைந்த தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும்விழா நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., தமிழச்சி தங்க பாண்டியன் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

விருகம்பாக்கம் எம்.எல்.ஏ. பிரபாகர ராஜா உள்பட ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தி.மு.க. பெண் தலைவர்கள் இருவர் கலந்து கொண்டதால் கூட்டத்தை கட்டுப்படுத்த ஏராளமான பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். விருகம்பாக்கம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் விருகம்பாக்கம் சட்டம்-ஒழுங்கு பிரிவில் காவலராக பணிபுரிந்து வரும் இளம்பெண் போலீஸ் ஒருவரும் சக காவலர்களோடு சீருடையில் பணியில் ஈடுபட்டிருந்தார்.

கூட்டம் முடிந்து கனிமொழி உள்ளிட்ட தலைவர்கள் புறப்பட்ட நேரத்தில் லேசான நெரிசல் ஏற்பட்டது. இதனை பயன்படுத்தி கூட்டத்தில் பங்கேற்றிருந்த தி.மு.க. இளைஞர் அணி பிரமுகர்களான பிரவீன், ஏகாம்பரம் இருவரும் பெண் போலீசின் இடுப்பை பிடித்து கிள்ளி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுதொடர்பாக மற்ற காவலர்களிடம் கூறினார்.

உடனே கேசவன் என்ற காவலர் அவர்களை தட்டிக்கேட்டார். அப்போது தி.மு.க. பிரமுகர்களுக்கும், காவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைபார்த்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் என்ன நடந்தது? என்று கேட்டு விசாரித்து கொண்டிருந்தார். இந்த நேரத்தில் போலீஸ் பிடியில் இருந்து பிரவீன் தப்பி ஓடினார்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியரும் மற்ற காவலர்களும் விரட்டி சென்று பிரவீனை மடக்கி பிடித்தனர். இதைத் தொடர்ந்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்றிருந்த தி.மு.க. நிர்வாகிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

போலீஸ் பிடியில் சிக்கிய இருவரையும் மீட்க தி.மு.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரச்சினையை பெரிதுபடுத்த வேண்டாம் என்று அவர்கள் கேட்டுக்கொண்டதை தொடர்ந்து தி.மு.க. நிர்வாகிகளை போலீசார் அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து இச்சம்பவத்துக்கு அ.தி.மு.க., பா.ஜனதா கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், அண்ணாமலை ஆகியோர் கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

தி.மு.க. நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே பெண் போலீஸ் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கோயம்பேடு துணை கமிஷனர் குமார் முன்பு தி.மு.க. நிர்வாகிகளான பிரவீன், ஏகாம்பரம் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது கூட்ட நெரிசலில் தெரியாமல் கைபட்டுவிட்டதாகவும், வேண்டுமென்றே செய்யவில்லை எனவும் இதற்காக பெண் போலீசிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்றும் கடிதம் எழுதி கொடுத்தனர்.

பெண் போலீசும் தனது புகார் மீது மேல்நடவடிக்கை தேவை இல்லை என்று எழுதி கொடுத்ததாகவும், இதனால் இரு தரப்பினரும் சமாதானமாக சென்றுவிட்டனர் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்த விவகாரம் இத்தோடு முடிந்துவிட்டது என்றே கருதப்பட்டது. இந்த நிலையில் விருகம்பாக்கம் போலீசார் பெண் போலீசிடம் அத்துமீறிய தி.மு.க. நிர்வாகிகளான பிரவீன், ஏகாம்பரம் ஆகிய இருவரையும் நேற்று நள்ளிரவில் வீடுபுகுந்து அதிரடியாக கைது செய்தனர்.

பின்னர் இரவோடு இரவாக சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டு வீட்டில் 2 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் கோர்ட்டு உத்தரவின் பேரில் அவர்கள் நள்ளிரவிலேயே சிறையில் அடைக்கப்பட்டனர். இருவர் மீதும் இந்திய தண்டனை சட்டம் 353 (அரசு பணி செய்யவிடாமல் தடுத்தல்) 354 ஐ.பி.சி. (பெண்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி செயல்படுதல்) மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சமாதானமாக பேசி பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் போலீசார் சத்தமில்லாமல், அதிரடியாக செயல்பட்டு 2 பேரையும் நள்ளிரவில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிரவீன், ஏகாம்பரம் இருவரும் 129-வது வார்டு இளைஞர் அணி உறுப்பினர்களாக பணியாற்றி வந்தனர். இந்த நிலையில்தான் அவர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு சிக்கி உள்ளனர்.

Share this story