விடியும் ஆட்சியல்ல; வெள்ளநீரும் வடியா ஆட்சி இது : அமைச்சர் நேருவுக்கு அதிமுக கண்டனம் 

By 
marudhu27

'வடகிழக்குப்பருவ மழை வரும் சூழலில், திமுக அமைச்சர் நேரு அபவாதம் பேசிவருவது, முதுமை வந்த அளவுக்கு முதிர்ச்சி வரவில்லை என்பதையே காட்டுகிறது' என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக செய்தித்தொடர்பாளருமான கவிஞர் மருது அழகுராஜ் விளக்கியுள்ள அறிக்கை வருமாறு :  

வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காலத்தே செய்து முடிக்காத தி.மு.க அரசை, முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் இடித்துரைத்திருப்தை ஆக்கப் பூர்வமாக எடுத்துக் கொள்வதற்கு பதிலாக, தன் இருப்பை காட்டிக் கொள்ள ஓ.பி.எஸ் குறை கூறுகிறார் என்று..

தொடர்ந்து தனது பொறுப்பை தட்டிக் கழிக்கும் வகையில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு அபவாதம் பேசிவருவது, முதுமை வந்த அளவுக்கு நேருவுக்கு முதிர்ச்சி வரவில்லை என்பதையே காட்டுகிறது.

மூன்று முறை முதலமைச்சர் செங்கோலை கையில் ஏந்திய ஓ.பி.ஸ்  தி.மு.க ஆட்சி பறிகொடுத்த ஜல்லிக்கட்டு உரிமையை எழுபத்தி இரண்டு மணிநேரத்தில்  மீட்டெடுத்து, ஒன்பதாண்டு காலம் பூட்டிக் கிடந்த வாடிவாசல்களை திறந்து விட்ட வரலாற்றுக்கு சொந்தக்காரர் என்பதை நாடறியும்.

அதுமட்டுமல்லாமல், வர்தாபுயல் கஜாபுயல் சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களின் போதெல்லாம் அம்மாவின் தொண்டனாக களமிறங்கி அவர் ஆற்றிய பணிகளை தமிழக மக்கள் அறிவார்கள்.

எனவே, முதல்வராக பொதுப்பணித்துறை அமைச்சராக நீண்ட அனுபவம் கொண்ட ஓ.பி.எஸ் இடித்துரைப்பதையும் எடுத்துரைப்பதையும் ஆக்க பூர்வமாக எடுத்துக் கொள்வதை விட்டு விட்டு, ஆணவத்தோடு  லாவணி பாடுவது ஒரு மூத்த அமைச்சருக்கு அழகல்ல.

கடந்த ஆண்டு, இதே வடகிழக்கு பருவ மழையின் போது மக்கள் எதிர்கொண்ட  சிரமங்களை கருத்தில் கொண்டு வடிகால் பணிகளை துரிதமாக தி.மு.க.ஆட்சி மேற்கொண்டிருக்க வேண்டும்.

ஆனால், அதனை செய்யாமல் இன்று மெட்ரோ ரயில் பணிகள் உள்ளிட்ட காரணிகளை மேற்கோள் காட்டுவது தி.மு.க.அரசின் நிர்வாகத் திறமையின்மையையே காட்டுகிறது.

மேலும், கடந்த ஆண்டு மழைச் சேதங்களின் போது, மக்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், இனி வரும் காலங்களில், ஒரு சொட்டு தண்ணீர் தேங்காத நிலையை உருவாக்குவோம் என வாக்குறுதி தந்தார்.

ஆனால், அந்த வாக்குறுதியும் கிடப்பில் போடப்பட்ட திமுக.வின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகிப் போனது பரிதாபமே.

எனவே, தங்கள் இயலாமையையும் முயலாமையையும் மறைக்கும் ஆமை வேக தி.மு.க.அரசு விமர்சனங்களை பக்குவத்தோடு உள்வாங்கிக் கொண்டு, பண்பட்ட நிர்வாகத்தை முன்னெடுக்க வேண்டும்.  

அதனை முறையாக விரைந்து செய்யாது போனால், விடியல் ஆட்சி என தங்களை சொல்லிக் கொள்ளும் தி.மு.க.வை மக்கள் வெள்ள நீர் "வடியா" ஆட்சி என்று வசைமாறி பொழிவார்கள் என்பது நிச்சயம்.

இவ்வாறு அதிமுக செய்தித்தொடர்பாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

Share this story