உங்கள் வீட்டில் உள்ள நாய்கூட நாட்டுக்காக இறந்ததா? : கார்கே பேச்சுக்கு, பாஜக எம்.பி.க்கள் அமளி

By 
apology

இந்திய ஒற்றுமை பயணத்தின்போது ராஜஸ்தானின் அல்வாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உரையாற்றினார்.

அப்போது, அருணாசல பிரதேச எல்லையில் சமீபத்தில் நடந்த இந்தியா-சீனா மோதல் குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசும்போது,

"காங்கிரஸ் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது. நாட்டின் ஒற்றுமைக்காக இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி உயிரை தியாகம் செய்தார்கள். எங்கள் கட்சி தலைவர்கள் நாட்டு ஒற்றுமைக்காக தங்கள் உயிரைக் கொடுத்தார்கள்.

பாஜக எதையும் இழக்கவில்லை. உங்கள் வீட்டில் உள்ள நாய் கூட நாட்டுக்காக இறந்ததா? இருப்பினும், அவர்கள் தங்களை தேசபக்தர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள். நாங்கள் ஏதாவது சொன்னால் நாங்கள் தேச விரோதிகள் என அழைக்கப்படுகிறோம்" என்றார்.

கார்கே, பாஜகவை தாக்கி பேசும்போது நாய் என்ற வார்த்தையை பயன்படுத்தியதால் பாஜகவினர் கடும் அதிருப்தி தெரிவித்தனர். இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. கார்கே கூறிய கருத்திற்காக காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக எம்.பி.க்கள் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர்.

இதற்கு காங்கிரஸ் தரப்பில் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. நாகரிமற்ற வகையில் மனதை புண்படுத்தும் வார்த்தையை பயன்படுத்தியதற்காக பாஜகவிடமும், பாராளுமன்றத்திடமும், நாட்டு மக்களிடமும் கார்கே மன்னிப்பு கேட்கவேண்டும் என மாநிலங்களவையில் மத்திய வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயல் வலியுறுத்தினார்.

இந்த விவகாரம் காரணமாக சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அப்போது குறுக்கிட்ட துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான ஜக்தீப் தன்கர், இந்த கருத்து பாராளுமன்றத்திற்கு வெளியே கூறப்பட்டதாக கூறினார். நாட்டின் 135 கோடி மக்கள் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வெளியில் யாரோ எதையோ பேசியிருக்கலாம்.

நீங்கள் ஒன்றும் குழந்தைகள் இல்லை என்றும் அவைத்தலைவர் கூறினார். இதற்கிடையே தனது கருத்திற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.

Share this story