எடப்பாடி பூதமும், புதிய பூகம்பமும் : மருது அழகுராஜ் எச்சரிக்கை 
 

marudhu68

'புரட்சித்தலைவி அம்மாவின் மறைவிற்குப் பிறகு, எடப்பாடியின் ஒருதலைச் சார்பு சாதிய நிலை அரசியல், ஒவ்வொரு சமூகமாக அ.தி.மு.க. வை விட்டு வெறியேறும் நிலையை உருவாக்கியிருக்கிறது' என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

முக்குலத்தோர், யாதவர், முத்தரையர், நாடார், தேவந்திர குல வேளாளர் உள்ளிட்ட தென்பகுதி மக்களின் ஆதரவு இல்லாத அண்ணா தி.மு.க.வை கட்டி எழுப்புவதே, தனது நோக்கம் என்பதை வெளிப்படையாகவே கொண்டு அதனை செயல்படுத்தி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. 

அதிலும், மிகக் குறிப்பாக முக்குலத்தோரை முற்றிலுமாக அ.தி.மு.க விலிருந்தே துடைத்தெறிந்து விடவேண்டும் என்னும் வெறிகொண்டு அலைகிறார் எடப்பாடி.

இந்த புறக்கணிப்பு அரசியலை முறியடிக்க தென்மாவட்ட அரசியல் களத்தை, பா.ம.க. பாணியில் கட்டமைக்க வேண்டிய அவசியம் உருவாகி விட்டதாகவே அச்சமூகம் கருதத் தொடங்கிவிட்டது.

ஏற்கனவே சசிகலா, தினகரன் ஆகியோரை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த எடப்பாடி காட்டுகிற தொடர் வன்மம்.

இப்போது ஓ.பி.எஸ் மீதும் விரிவுபடுத்தப்பட்டிருக்கும் நிலையில்..

இப்படி, முக்குலத்து சமூகத்தை முற்றிலுமாக தனிமைப்படுத்த எடப்பாடி வெறியோடு செயல்படுவதும்..
அதே வேளையில், ஒரு கவுண்டர் மட்டும் தான் தமிழ்நாட்டுக்கு முதல்வராக வரமுடியும் என்று செங்கோட்டையனை விட்டு பொதுமேடையிலேயே பேசவைத்து, தன் சமூக ஆதரவு அரசியலை இழந்து விடக் கூடாது என்பதில் எடப்பாடி காட்டும் வெறித்தனமும்.. 

கூடவே, சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி போன்றோரை தூண்டிவிட்டு எடப்பாடி நடத்துகிற தேவரின எதிர்ப்பு அரசியலும்..

வன்னியர், கவுண்டர் கூட்டமைப்பு போன்றதாக அண்ணா தி.மு.க.வை அடையாளப்படுத்துகிறது.

இதனால்தான், வட மாவட்டங்களில் அண்ணா தி.மு.க.வில் உள்ள தாழ்த்தப்பட்டோர் மற்றும் நாயுடு, முதலியார், அகமுடையோர் உள்ளிட்ட பிற சமூகத்தினரின் வெறுப்புக்கு அதி.மு.க.ஆளாகி வருகிறது .

இதன் விளைவாகவே கடந்த சட்டமன்ற தேர்தலில் சி.வி. சண்முகம், எம். சி. சம்பத், கே.சி.வீரமணி என மொத்த வன்னியர் சமூகம் சார்ந்த அமைச்சர்களும், வன்னியர் அல்லாத மொத்த சமூகங்களின் ஒன்றுபட்ட எதிர்ப்பால் தோற்கடிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியாக சாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட கட்சியை, சாதிய புதை சேற்றில் எடப்பாடி சிக்க வைத்து விட்டதின் விளைவும்.. அவரது தேவர் சமூக எதிர்ப்பும் இப்போது தென்மாவட்டத்திலும் இதுவரை இல்லாத புதிய அரசியல் சூழலுக்கு விதையிட்டிருக்கிறது.

வன்னியர் வாக்குகளுக்கு பா.ம.க.  பறையர் சமூக வாக்குகளுக்கு வி.சி.க. முதலியார் சமூக வாக்குகளுக்கு ஏ.சி.சண்முகத்தின் பு.நீ.க. தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்கு பு.த.க என பல சாதிய கட்சிகள்  தங்களை நிலை நிறுத்திக்கொண்ட போதும், இதுவரை முக்குலத்தோர் முத்தரையர் உள்ளிட்ட சமூகங்கள் முழுமையாக அ.தி.மு.க.வை சார்ந்தே நின்றன.

ஆனால், புரட்சித்தலைவி அம்மாவின் மறைவிற்குப் பிறகு எடப்பாடியின் ஒருதலைச் சார்பு சாதிய நிலை அரசியல், ஒவ்வொரு சமூகமாக அ.தி.மு.க. வை விட்டு வெறியேறும் நிலையை உருவாக்கியிருக்கிறது.

முக்குலத்தோர் வரையறைக்குள் இல்லாத வல்லம்பர் சமூகம் சார்ந்த நத்தம் விஸ்வநாதன், களப்பின கன்றான விஜயபாஸ்கர் போன்றரை கக்கத்தில் வைத்துக் கொண்டு எடப்பாடி நடத்துகிற தேவரின எதிர்ப்பு அரசியல்...

இதுகாறும் இல்லாத அளவிற்கு பெரும் கொந்தளிப்பை முக்குலத்து இளைஞர்கள் பெண்களிடையே உருவாக்கியிருக்கிறது.

குறிப்பாக ஓ.பி.எஸ் மீது இருக்கும் அச்சமூக மக்களின் மரியாதையும் அவர் எடப்பாடி தூண்டுதலால் அவமானப்படுத்தப்பட்ட நிகழ்வும்..தென்மாவட்ட மக்களிடையே கடும் கோபத்தை உருவாக்கி விட்டது என்பதே உண்மை.

பசும்பொன் தேவரின் வெளியேற்றம் எப்படி, காங்கிரஸ் கட்சியை  தமிழ் நாட்டில் ஆழக் குழி தோண்டி புதைக்கச் செய்ததோ, அது போன்றதோர் அடுத்த புதை குழியை அதிமுக வுக்கு தென்பகுதி ஏற்பாடு செய்யத் தொடங்கி விட்டதாகவே தோன்றுகிறது.

ஆம்.. முக்குலத்து சமூகத்தை எடப்பாடி தொடர்ந்து அவமானப்படுத்தி வரும் நிலையில், இதனை பா.ஜ.க. பயன்படுத்திக் கொள்ளலாம் என்றால், அங்கேயும் எடப்பாடிக்கு இணக்கமான அண்ணாமலை கவுண்டரே தலைவராக இருக்கும் நிலையில், முக்குலத்து சமூகம் எதிர்காலத்தில் பாமக பாணியிலான அரசியலை முன்னெடுத்து தேவரினத்தின் அரசியல் சக்தியை அது நிரூபித்து காட்டுமா?

இல்லை தங்களது ஃபிக்ஸட் டெபாசிட்டான தேவரின வாக்குகளை தக்க வைக்க அதிமுகவில்  சூடு சொரணையுள்ள தலைவர்கள் எடப்பாடிக்கு எதிராக குரல் எழுப்புவார்களா? போன்ற கேள்விகளுக்கான விடையை நோக்கி நகர்கிறது தென் தமிழகம்.

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

Share this story