திமுகவின் குச்சிக்கு ஆடும் குரங்குக் குட்டியாக, எடப்பாடி பழனிசாமி மாறிவிட்டார் : மருது அழகுராஜ் பேச்சு 

marudhu56

திமுகவின் குச்சிக்கு ஆடும் குரங்குக் குட்டியாக, எடப்பாடி பழனிசாமி மாறிவிட்டார் என அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளரும், செய்தித் தொடர்பாளருமான கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விளக்கிப் பேசியதாவது :

"அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஓர் ஒப்பில்லா இயக்கம். இதனை தோற்றுவித்தவர் எடப்பாடி பழனிச்சாமி அல்ல.

இப்பேரியக்கத்தை, ஆட்சியை புரட்சித்தலைவர் தொடங்கினார்; முக்கடல் சூழ்ந்த பாரதத்தில், மூன்றாம் பேரியக்கமாக முடிசூட்டியவர் புரட்சித்தலைவி அம்மா. 

புரட்சித்தலைவி அம்மா, தான் நோய்வாய்ப்பட்டிருந்த போதும், 'சட்டப்பேரவையில் அதிமுக எனக்கு பின்னாலும் தமிழகத்தை நூறாண்டு ஆட்சி செய்யும் என சூளுத்தார்.

ஆக, எடப்பாடி தொடங்காத ஓர் கட்சி. இவருக்கு ஓட்டுப் போட்டு.. அதனால், ஆட்சியில் அமர்ந்தவரும் அல்ல. 

ஆட்சி முடிந்த நிலையில், அதிமுகவின் பொன் விழா ஆண்டும் வருகிறது. 

இத்தருணத்தில், கட்சிக்காக உதிரம் கொடுத்தவர்களுக்கு, உழைத்தவர்களுக்கு பொற்கிழிகள் கொடுத்து, பாராட்டு தெரிவிக்க வேண்டியது கடமை.

ஆனால், எடப்பாடியோ இயக்கத்தை உடைத்து, இவரே உள்கட்சித் தேர்தலை நடத்தி, 

பின்னர்.. 'இரு தலைவர்களும் தேர்வு செய்யப்பட்டு விட்டோம்' என்று பரஸ்பரம் இனிப்பெல்லாம் கொடுத்துவிட்டு, 

பின்னர்.. சேலத்தில் ஜூன் 8ஆம் தேதி, 'ஒற்றைத் தலைமை என்பது கற்பனை' என்று இவரே பத்திரிக்கையாளர்களிடம் பரவசத்தோடு பேசியும் இருக்கிறார்.

பின்னர் ஓர் நாள், ' என் பெயருக்கு கட்சியை மாற்றுங்கள்; நான் அண்ணா திமுகவின் அதிபராக வேண்டும்" என்று ஆசைப்படுகிறார்; அதற்கு உடன்படாதவர்கள் அத்தனை பேரையும் நீக்குவதும்,

புரட்சித் தலைவரால் ஐநா சபைக்கு அனுப்பப்பட்ட பண்ருட்டியாரையும் 'கிளைச் செயலாளருக்கு கூட தகுதியற்றவர்' என்ற போக்கினாலும் தான் எடப்பாடியை இடி அமீன் என சொல்கிறேன்.

அவர், சர்வாதிகாரத்தை தனக்குள் வைத்துக்கொண்டு, ஜனநாயகத்தை அனுமதிக்க மாட்டேன் என்கிற அரசியல் போக்கோடு இருப்பதால், இடி அமீன் எடப்பாடி என்றால், அது மிகையல்ல.

எடப்பாடி, தனது ஆட்சியை நடத்துவதற்கு ஓபிஎஸ் தயவு அன்று தேவைப்பட்டிருந்தது. அப்போதெல்லாம், ஓபிஎஸ்ஸை அண்ணே.. அண்ணே.. என சொன்னவர்.

எடப்பாடியின் அரசியல் செயல்பாடுகளால், அபகரிப்பு அரசியலால் ஓபிஎஸ் கண்டிக்கும் நிலை வந்த பொழுது, 'ஓபிஎஸ், ஜானகி அணியில் இருந்தார்' என சொல்வது தவறு. 

ஏனெனில், புரட்சித்தலைவி அம்மாவால் மூன்று முறை மும்முடிச் சோழனாக அங்கீகரிக்கப்பட்டவர் ஓபிஎஸ் என்பது யாவரும் அறிவர்.

இந்த சூழ்நிலையில், அதிமுக பிளவுபட்டு கிடந்தால்தான், திமுக தனக்கு நேரடியான தேர்தல் ஆதாயம் கிடைக்கும் என கருதுகின்றது.

கடந்த கால அரசியல் நிகழ்வுகளில், புரட்சித்தலைவர் மீதே ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி 'நமது கழகம்' என கட்சி தொடங்கிய எஸ்டிஎஸ்ஸை புரட்சித் தலைவர், பின்னர் கழகத்தில் இணைத்துக் கொண்டதே அதிமுக வரலாறு.

இந்த விவரங்களை எல்லாம் எடப்பாடியார் ராஜன் செல்லப்பாவிடம் விரிவாக கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். 

இன்றைய அரசியல் சூழ்நிலையில், பாஜக; அதிமுகவின் ஒற்றுமையை மிகவும் எதிர்பார்க்கிறது. இதன் மூலம், அடுத்த 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை ஆக்கப்பூர்வமாக எதிர்கொள்கிறது.

ஆனால், எடப்பாடி பழனிசாமியோ கட்சியை உடைத்துக் கொண்டு திரிகிறார். ஓட்டைப்படகில் எவர் ஏறுவார்?

பாஜக நினைத்தபடி, ஒன்றுபட்ட அதிமுக உருவானால், 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைத்துவிடும் என்பது நிச்சயம். இதனை தெரிந்து கொண்ட திமுக தடுப்பதற்கு நினைக்கிறது.

இந்நிலையில், எடப்பாடி சம்பந்தி ரூ.4,500 கோடி டெண்டர் வழக்கு, கோடநாடு கொலை- கொள்ளை வழக்கு,11 மருத்துவக் கல்லூரிகள் கட்டிய விவகாரம் என அத்தனை வழக்குகளும் திமுகவின் எல்லைக்குள்- கட்டுக்குள் வந்துவிட்ட காரணத்தால், பாஜக தயவு தனக்கு  தேவையில்லை என எடப்பாடி முடிவெடுத்து விட்டார்.

மொத்தத்தில், திமுகவின் குச்சிக்கு ஆடும் குரங்குக் குட்டியாக, எடப்பாடி பழனிசாமி மாறிவிட்டார் என்பதே உண்மை என நம்புகிறேன்.

இவ்வாறு அதிமுக செய்தித் தொடர்பாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

Share this story