ஓ.பன்னீர்செல்வம் அழைப்பை ஏற்க, எடப்பாடி பழனிசாமி மறுப்பு..

eps speech

ஓ.பன்னீர்செல்வம் விடுத்த அழைப்பை ஏற்க மறுத்து, எடப்பாடி பழனிசாமி கூறியதாவது :

'கூட்டு தலைமையாக இணைந்து செயல்படுவோம் என்று ஓ.பன்னீர்செல்வம் விடுத்த அழைப்பை ஏற்க இயலாது. அவர் அடிக்கடி அழைப்பு விடுப்பார். 

ஏற்கனவே, தர்ம யுத்தம் சென்றார். யாரை எதிர்த்து சென்றார். அவருக்கு பதவி வேண்டும். பதவி இல்லாமல் இருக்க முடியாது. 

உழைப்பு கிடையாது ஆனால் பதவி மட்டும் வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பதவி வேண்டும் என்பது தான் அவருக்கு முக்கியம். மற்றவர்களை பற்றி அவருக்கு கவலை இல்லை. இணைவோம் என்பதை எதன் அடிப்படையில் வைத்து அவர் எப்படி சொல்கிறார். 

கட்சி அலுவலகத்தில் இருந்த நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். ரவுடிகளை ஏவி அலுவலகத்தில் தாக்குதல் நடத்தி முக்கிய ஆவணங்களை திருடி சென்று உள்ளனர். 

தலைமை அலுவலகத்தை சூறையாடியவர்களுடன் எப்படி இணைய முடியும். அ.தி.மு.க.வுக்கு எதிராக செயல்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துடன் எப்படி இணைந்து செயல்பட முடியும். 

எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை உருவாக்கியபோது, தீய சக்தி தி.மு.க. அதை வேரோடு ஒழிப்பது தான் எனது முதல் கடமை என்று சொன்னார். அவரோடு ஓ.பன்னீர்செல்வம் தொடர்பு வைத்திருக்கிறார். 

அவரது மகன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து சிறப்பான ஆட்சி நடத்துகிறீர்கள் என்று பாராட்டுகிறார். இது கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் மனக்கசப்பை ஏற்படுத்துகிறது. 

கட்சியில் உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஒருவருடைய மகனே, ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஆளும் கட்சியை புகழ்ந்து பேசினால் எப்படி இருக்கும்? 

தி.மு.க.வுடன் தொடர்பு வைத்திருப்பவர்களுடன் எப்படி இணைந்து செயல்பட முடியும். 

எனவே நிர்வாகிகள், தொண்டர்கள் விருப்பப்படி தான் ஒற்றைத்தலைமை வேண்டும் என்று கூறுகிறோம். 

நான் எப்போதும் எந்த பதவிக்கும் ஆசைப்பட்டது இல்லை. சொந்த காலில் நின்றுதான் வர வேண்டும் என்று நினைக்கிறேன். 

பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து நாங்கள் மேல்முறையீடு செய்திருக்கிறோம். அதில் என்ன தீர்ப்பு வருகிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

ஓ.பன்னீர்செல்வம் பதவிக்கு வருவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார். பதவி இல்லை என்றால் தர்மயுத்தம் செய்வார். யாரும் வேண்டாம் என்பார். 

மீண்டும் பதவி வேண்டும் என்றால் எல்லோரையும் சேர்த்துக்கொள்வோம் என்பார். இதுதான் ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடு. நாங்கள் 15 நாட்கள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். 

ஆனால் அவர் ஒற்றை தலைமைக்கு ஒத்துவரவில்லை. மக்கள், தொண்டர்கள் எண்ணத்தின் படிதான் கட்சி நடத்த முடியும். கட்சியின் சட்டத்திட்ட விதிகளை மதிக்க வேண்டும். 

பெரும்பான்மை கட்சி தொண்டர்கள் என்ன எண்ணுகிறார்களோ அதை பிரதிபலிக்க வேண்டும். 

மக்கள் எண்ணத்தின்படி கட்சி நடத்தினால் தான் ஆட்சிக்கு வர முடியும்' என்றார்.
*

Share this story