அதிமுக நிர்வாகிகளுக்கு, எடப்பாடி பழனிசாமி விடுத்த உத்தரவு..

epsspeech4

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை எதிர்த்து அ.தி.மு.க. களம் இறங்குகிறது.

அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக தனி அணியாக செயல்பட்டு வரும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சட்ட போராட்டத்தை நடத்தி வருகிறார். அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

யாருக்கு சாதகமாக தீர்ப்பு வரப்போகிறது? என்பது அரசியல் களத்திலும், அ.தி.மு.க. வட்டாரத்திலும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில்தான் யாரும் எதிர்பாராத விதமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்துள்ளது. இதனை வைத்து எடப்பாடி பழனிசாமி பலத்தை காட்ட திட்டமிட்டுள்ளார்.

இது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறும் இடைத் தேர்தல், தற்போதைய சூழலில் அ.தி.மு.க.வுக்கு முக்கியமான தேர்தலாகும். இதனை கருத்தில் கொண்டு இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி கட்சியினருக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்ட மன்ற தேர்தலின்போது கூட்டணி கட்சியான த.மா.கா. குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வி அடைந்தது. இதனை மனதில் வைத்து கட்சியினர் செயல்பட வேண்டும். தி.மு.க. அரசு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை மக்கள் மத்தியில் சரியாக நாம் கொண்டு சென்று பிரசாரம் செய்தாலே வெற்றி பெற்று விடலாம்.

எனவே அ.தி.மு.க. வெற்றிக்காக பம்பரமாக சுழன்று கட்சியினர் பணிபுரிய வேண்டும். ஆளும் கூட்டணியில் உள்ள கட்சி போட்டியிடுகிறதே? நம்மால் வெற்றி பெற முடியுமா? என்று தளர்ந்து போகாமல் பணியாற்றுங்கள். எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். நான் பார்த்துக் கொள்கிறேன் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கட்சிக்கு நிச்சயமாக இரட்டை இலை சின்னம் கிடைக்கும். இதில் எந்த குழப்பமும் அடையாதீர்கள். தி.மு.க. அரசு மீது பரவலாக எழுந்துள்ள விமர்சனங்களையும், அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகளையும் சொல்லி ஓட்டு கேளுங்கள். நாமே வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கையோடு புயல் வேகத்தில் தேர்தல் பணியாற்றுங்கள்.

எதிர்காலத்தில் நாம் பெறப்போகும் வெற்றிக்கு ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி அடித்தளமாக இருக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருக்கிறார். இவ்வாறு அ.தி.மு.க. மூத்த நிர்வாகி கூறினார்.

அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பாரதீய ஜனதா கட்சி தனித்து போட்டியிடுவதா? இல்லை அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதா? என்பது பற்றி இன்னும் எந்த முடிவையும் அறிவிக்காத நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் அ.தி.மு.க.வினர் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார்.
 

Share this story