எடப்பாடி வியூகம், வழக்கம் போல் துரோகம் : மருது அழகுராஜ் குற்றச்சாட்டு 

marudhu40

'பா.ஜ.க. கூட்டணியை பலவீனப்படுத்துவதும்.. அ தி மு க தொண்டர்களிடம் பா.ஜ.க.வுடனான உறவில் இணக்கமற்ற சூழலை உருவாக்குவதும்தான், எடப்பாடி தரப்பின் நோக்கமாகும்' என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக செய்தித் தொடர்பாளருமான கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

உதவியவர்களுக்கு துரோகம் செய்வதே எடப்பாடியின் வழக்கமும் பழக்கமும் ஆகும். அந்த வரிசையில் சசிகலா, ஓ.பி.எஸ். இவர்களைத் தொடர்ந்து பா.ஜ.க.வுக்கும் தனது கம்பெனி முத்திரையை அதன் நெற்றியில் பொறிக்க எடப்பாடி திட்டம் போடுகிறார்.

2019 நாடாளுமன்ற தேர்தலிலும் திட்டமிட்டே பா.ஜ.வு க்கு பூஜியமே கிடைக்குமாறு பார்த்துக்கொண்டதும் எடப்பாடி தான்.

இப்போதும், தனக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்த சுனில் காங்கிரஸிலேயே சேர்ந்து, அங்கு அவர் காங்கிரஸின் பிரதான பிரமுகர் ஆகிவிட்ட நிலையில் தனது மகனோடு சுனிலுக்கு இருக்கும் நட்பை பயன்படுத்தி, காங்கிரஸோடு அந்தரங்க உறவை எடப்பாடி தொடர்ந்து வருகிறார்.

இதன் காரணமாக, தமிழகத்தில் பா.ஜ.வுக்கு அரசியல் அறுவடையை வெறும் பதராக்கி முடிப்பது என்னும் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது.

கர்நாடகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா  மற்றும் தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் பா.ஜ.க.வின் வெற்றி வாய்ப்பை வெகுவாக குறைத்து விட்டால்.. பீகார், மேற்கு வங்காளம், பஞ்சாப், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில், நிதீஷ் குமார், மம்தா அகிலேஷ் ஆகியோரது பின்பலத்தோடு பா.ஜ.க.வின் ஆளுமையை தகர்த்து விடலாம் என்னும் காங்கிரஸின் திட்டத்திற்கு மறைந்து நின்று கை கொடுக்க.. எடப்பாடி அன்கோ ஒப்புக்கொண்டிருக்கிறது. 

அதன் காரணமாகவே, பா.ஜ.க.வுக்கு எதிரான கோபத்தை அதிமுக தொண்டர்களிடம் விதைக்கிற வேலையை எடப்பாடியின் மகன்  மிதுன் பின் நின்று வழிநடத்தும் ஐ.டி.விங் செய்யத் தொடங்கியிருக்கிறது.

ஒன்று..பா.ஜ.க. கூட்டணியை பலவீனப்படுத்துவது...

இரண்டு..அ தி மு க தொண்டர்களிடம் பா.ஜ.க.வுடனான உறவில் இணக்கமற்ற சூழலை உருவாக்குவது.. இது தான் எடப்பாடி தரப்பின் நோக்கமாகும்.

காரணம்,  ஒரு வேளை பா.ஜ.வோடு விருப்பமில்லாத தங்கள் கூட்டணியை தொடர வேண்டிய நிலை வந்தாலும், அது சொல்லும் தேர்தல் முடிவு என்பது பா.ஜ.வுக்கு பயனற்ற பூஜ்யமாகத்தான் இருக்க வேண்டும் என்பதே எடப்பாடியின் துரோக அரசியலின் எதிர்கால திட்டமாகும்.

இவ்வாறு அதிமுக செய்தித்தொடர்பாளர்  கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
 

Share this story