எடப்பாடியின் விபரீத புத்தி, தலைக்கு மேல் கத்தி : ஓபிஎஸ் தரப்பு விளாசல் 

By 
marudhu44

'எடப்பாடி போடும் விபரீத வேஷத்தை, அவரை சுற்றியிருக்கும் ஆட்களே விரும்பவில்லை' என அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், செய்தித் தொடர்பாளருமான கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

தி.மு.க.ஆட்சி தன்னை காப்பாற்றும் என்னும் நம்பிக்கையில், திமிர் கொண்டு அலைகிறார் எடப்பாடி.

பா.ஜ.க ஆட்சியால் இனி தனக்கு ஆக வேண்டியது எதுவுமில்லை. எனவே தனது துரோகத்தை காவி கட்சிக்கும் காட்ட வேண்டியது தான் என அவர் முடிவெடுத்து விட்டார்..

2024 நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை ஒற்றுமைப்படுத்தி பா.ஜ.க.வெற்றி பெற்றுவிட்டால், அதன் தொடர்ச்சியாக 2026 தமிழக சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க.  ஆட்சியை பிடித்து விடும் என்று ஆளும் கட்சியான திமுக அச்சப்படுகிறது. மேலும், தமிழ் நாட்டில் பா.ஜ.க வை படர விடாமல் தடுத்து விடுவதே தங்கள் எதிர்காலத்திற்கு நல்லது என கருதுகிறது.

திமுக.வின் எண்ணம் இது என்றால், எடப்பாடியோ அப்படி 2026 சட்டமன்ற தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளராக ஓ.பி.எஸ் தான் நிச்சயம் முன்னிறுத்தப்படுவார்.அதை தான் பா.ஜ.க.வும் விரும்பும். 

எனவே, தி.மு.க வின் திட்டத்திற்கு இசைவாக நடந்துகொண்டு, அ தி.மு.க.வை பிளந்து தமிழகத்தில் பா.ஜ.க. வின் வெற்றி வாய்ப்பை தடுப்பதற்கு துணைபோனால்தான், தன் மீதான தனது சம்பந்தி மீதான, தனது சகாக்கள் மீதான வழக்குகள் மற்றும் கொலை, கொள்ளை, லஞ்சம், ஊழல் உள்ளிட்ட அனைத்து வில்லங்கங்களில் இருந்தும் தி.மு.க உதவியுடன் விடுபட முடியும் என 'பழைய வெல்லம் உருட்டி' பழனிச்சாமி புதுக்கணக்கு போடுகிறார்.

மேலும்.. அடித்துக் குவித்து வைத்திருக்கும் ஆஸ்திகளையும் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதும், அவரது கூடுதல் திட்டமாக இருக்கிறது.

இப்படியாக..தி.மு.க. பின்னால் இருந்து தருகிற ஊக்கத்தால்தான், எடப்பாடி கள்ளுண்ட மந்திபோல, கர்வம் கொண்டு ஆடுகிறார். 

"அவின்க" கட்சி வேற, எங்க கட்சி வேற என்று நேற்று வரை டெல்லி சென்று அமித்ஷாவின் கால் பிடித்து கெஞ்சியவர் இன்று ஆணவம் கொப்பளிக்கிறார்.

ஆனால், எடப்பாடி போடும் இந்த விபரீத வேஷத்தை அவரை சுற்றியிருக்கும்  ஆட்களே விரும்பவில்லை.

மடியில் கனம் கொண்ட முன்னாள் அமைச்சர்களும் சரி, தி.மு.க.தயவிலான அரசியல் பிழைப்பை அருவருப்பாக உணர்கிற மனசாட்சி கொண்டவர்களும் சரி, எடப்பாடியை விட்டு விலகிவிட முடிவெடுத்து விட்டனர்.

இதனால், எடப்பாடி இல்லாத அண்ணா தி மு க  ஓ.பி.எஸ் தலைமையில் விரைவில் ஒன்றுபட்டு வென்று காட்டும் என்பது நிச்சயம்.  

அதே வேளையில், திமுக வின் சட்டப்பிரிவுச் செயலாளர் ஆர். எஸ். பாரதி சொன்னது போல எடப்பாடி தி.மு.க.விலேயே சேரும் நிலை வரலாம்.

அல்லது அவர் செய்திருக்கும் குற்றங்களுக்காக சிறை சென்று கம்பி எண்ணுகிற காலம் வரலாம்..

எப்படி ஆனாலும், விநாசகாலே விபரீத புத்தி, எடப்பாடி தலைக்கு மேல் கத்தி என்பது தான் உண்மை.

ஆம்.. துரோகத்தால் அவர் புரிந்த பாவங்களுக்கான அறுவடைக்காலம் தொடங்கி விட்டது. கர்மா ரிட்டர்ன்ஸ்..

இவ்வாறு அதிமுக செய்தித்தொடர்பாளர்  கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
 

Share this story