இரட்டைத்தலைமை விலாசத்துடன், அதிமுக தலைமைக் கழகத்துக்கு தேர்தல் ஆணையம் கடிதம்..

By 
tec1

உள்நாட்டில் பல்வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து வசித்து வருவோர் தங்களது சொந்த மாநில தேர்தல்களில் வாக்களிக்க வகை செய்யும் மார்க் 3 எனப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தேர்தல் கமிஷனுக்காக ஒரு பொதுத்துறை நிறுவனம் உருவாக்கி உள்ளது.

இதற்கு 'ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்' என பெயரிடப்பட்டுள்ளது. இதை பயன்படுத்துவது குறித்து தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மாதிரியுடன் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கருத்து கேட்டு ஆலோசனை நடத்த ஜனவரி 16-ந்தேதி கூட்டம் ஒன்றுக்கு தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு கடிதம் அனுப்பி வருகிறார்.

இந்த நிலையில் கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்குமாறு சத்யபிரத சாகு அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், அ.தி.மு.க. இரட்டை தலைமையை குறிப்பிடும் வகையில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.

ஏற்கனவே அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிசாமி பெயரில் வரவு செலவு கணக்கு இந்திய தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்யப்பட்டது. எடப்பாடி பழனிசாமி பெயரில் சமர்ப்பிக்கப்பட்ட கணக்கை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு அதை தனது இணையதளத்திலும் பதிவேற்றம் செய்தது.

அதே போல், ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க.வின் கருத்துக்களை கேட்கும் வகையில் தேசிய சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியது. அதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று குறிப்பிட்டு அந்த கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு அனுப்பிய கடிதத்தில் இரட்டை தலைமையை குறிக்கும் வகையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டுள்ளார்.

Share this story