அவசர சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் : அமைச்சர் ரகுபதி தகவல்

By 
rummy

5 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில், மாணவர் சேர்க்கைக்கான ஆணையினை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முதல் 12 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கான சேர்க்கை ஆணையை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.

தமிழகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் மொத்தம் 1,731 இடங்கள் உள்ள நிலையில் முதல் சுற்று கலந்தாய்வின் முடிவில் சுமார் 1,300 இடங்கள் நிரம்பியுள்ளன. மீதம் இருக்கும் இடங்கள் இரண்டாம் சுற்று கலந்தாய்வில் நிரப்பப்படும்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் ரகுபதி கூறியதாவது:-

ஆன்லைன் ரம்மிக்கான அவசர சட்டம் விரைவில் கொண்டு வரப்படும். அச்சட்டம் எந்த நீதிமன்றத்திலும் ரத்து செய்யப்படாத வகையில் வலுவானதாக கொண்டுவர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதா குறித்து கவர்னர் கேட்ட விளக்கங்கள் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சட்டத்துறையால் வழங்கப்பட்டுள்ளது. நீட் விலக்கு மசோதாவிற்கு நல்ல முடிவு வரும்.

துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதாவிற்கு கவர்னர் மாளிகையிலிருந்து இதுவரை எந்த பதிலும் கிடைக்கப்பெறவில்லை இவ்வாறு அவர் கூறினார்.

Share this story