ஈரோடு தொகுதி இடைத்தேர்தல் : திமுக, அதிமுக மோதலில் ஜெயிக்கப் போவது யாரு? கள நிலவரம்..

By 
vote1

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக பார்க்கப்படுகிறது. இதுவரை நடந்த தேர்தல்களில் திராவிட கட்சிகளே மாறி, மாறி போட்டியிட்டு வெற்றி பெற்றது.

இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தனது மகன் திருமகன் ஈவெராவுக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு வாங்கி கொடுத்தார். இவரை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணி சார்பில் த.மா.கா. வேட்பாளர் யுவராஜா போட்டியிட்டார். இதில் 8 ஆயிரத்து 904 ஓட்டுகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார்.

இதனால் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஈரோடு தொகுதி காங்கிரஸ் வசமானது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா 67,300 ஓட்டுகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட த.மா.கா. வேட்பாளர் யுவராஜா 58,396 ஓட்டுகள் பெற்று குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 11,629 வாக்குகள் பெற்று 3-வது இடத்தையும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் 10,005 வாக்குகள் பெற்று 4-வது இடத்தையும் பெற்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனால் இந்த தொகுதி காலியானது.

இதையடுத்து இந்த தொகுதியில் 6 மாத காலத்துக்குள் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது. வருகிற மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும். தி.மு.க. அரசின் 1½ ஆண்டு ஆட்சி காலத்தில் நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பதால் இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்துள்ளது.

கடந்த தேர்தலில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது தி.மு.க. போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் கடந்த முறை த.மா.கா.வுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது அ.தி.மு.க. போட்டியிட போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.வும் மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளருமான சந்திரகுமார், அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு ஆகியோர் போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதேபோல் கடந்த முறை தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரசும், அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட த.மா.காவும் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் 2-வது மகன் சஞ்சய் சம்பத் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்களும் மீண்டும் காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் த.மா.கா.வும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகரிடம் கேட்டபோது கூறியதாவது:- கடந்த முறை எங்களது வேட்பாளர் யுவராஜா குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். எனவே இந்த முறை நாங்களும் போட்டியிட விரும்புகிறோம். இதுகுறித்து எங்களது கட்சி தலைவர் கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேசி வேட்பாளரை அறிவிப்பார். அதற்கான காலம் இன்னும் உள்ளது.

இதற்கிடையே தி.மு.க-அ.தி.மு.க. இடையே நேரிடையாக பலப்பரீட்சை ஏற்படுமா? அல்லது கூட்டணி தர்மத்திற்காக மீண்டும் காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரசுக்கு ஒதுக்கப்படுமா என்று தொண்டர்கள் எதிர்ப்பார்ப்புடன் காத்து உள்ளனர். தமிழகத்தில் கடந்த 1957-ம் ஆண்டு முதல் இதுவரை 101 சட்டமன்ற இடைத்தேர்தல்கள் நடந்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 102-வது இடைத்தேர்தல் ஆகும். இதுவரை நடந்த 101 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் 29 முறை எதிர்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. இதில் 1959-ல் அருப்புக்கோட்டையில் எஸ்.சுந்தரபாரதி, 2017-ல் ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி. தினகரன் ஆகியோர் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் ஆவர். மற்றவர்கள் ஆளும் கட்சி அல்லது அதன் கூட்டணியை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

ஒவ்வொரு இடைத்தேர்தலையும் ஆளும் கட்சியினர் கவுரவ பிரச்சினையாக கருதி தேர்தல் பணியாற்றி வருகின்றனர். கடந்த 1½ ஆண்டு கால தி.மு.க. ஆட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர் என்று பா.ஜனதாவினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதற்கு விடை சொல்லும் வகையில் அமைந்துள்ளது. 

 

Share this story