என் மனைவிகூட இப்படி திட்டியதில்லை : டில்லி முதல்வர் கெஜ்ரிவால் வேதனை

kejri11

தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கும், துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு உள்ளது. இதுதொடர்பாக வார்த்தைப் போர் தொடர்கிறது.

ஆம் ஆத்மி அரசாங்கம் கொண்டு வந்துள்ள இலவச மின்சார திட்டம் குறித்து விசாரணை நடத்த டெல்லி துணை நிலை ஆளுநர் விகே சக்சேனா சமீபத்தில் உத்தரவிட்டார்.

துணை நிலை ஆளுநரின் இந்த உத்தரவையடுத்து, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பாஜகவை கடுமையாக சாடினார். "ஆம் ஆத்மியின் இலவச மின்சார உத்தரவாதத்தை குஜராத் மக்கள் மிகவும் விரும்புகின்றனர். அதனால்தான் டெல்லியில் இலவச மின்சாரத்தை நிறுத்த பாஜக விரும்புகிறது.

டெல்லி மக்களே எங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். உங்கள் இலவச மின்சாரத்தை எந்த சூழ்நிலையிலும் நிறுத்த விடமாட்டேன். குஜராத் மக்களுக்கும் நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். குஜராத்தில் ஆம் ஆத்மி அரசாங்கம் அமைந்தால், உங்களுக்கும் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்" என கெஜ்ரிவால் பதிவிட்டிருந்தார்.

இதற்கிடையே மகாத்மா காந்தி மற்றும் லால்பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 2 ம் தேதி ராஜ்காட் மற்றும் விஜய் காட் பகுதியில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது அமைச்சர்கள் கலந்து கொள்ளவில்லை. இதற்கு துணைநிலை ஆளுநர் சக்சேனா கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து கெஜ்ரிவாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில், இது குடியரசு தலைவரை அவமதிக்கும் செயல், என்று காட்டமாக குறிப்பிட்டார். ஆளுநரின் இந்த கண்டனத்தை தொடர்ந்து இன்று கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.

அதில், "துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா என்னை தினமும் திட்டும் அளவுக்கு என் மனைவி கூட என்னை திட்டியதில்லை. கடந்த ஆறு மாதங்களில் துணைநிலை ஆளுநர் கடிதம் எழுதிய அளவுக்கு, என் மனைவி எனக்கு காதல் கடிதங்கள் எழுதவில்லை.

ஆளுநர் அவர்களே, நீங்கள் கொஞ்சம் கோபத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள். அதுபோல் உங்களை இயக்குபவர்களையும் அமைதியாக இருக்கச் சொல்லுங்கள்" என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

Share this story