காலமெல்லாம் துரோகத்தை சாடிய பசும்பொன் ஐயாவின் ஆன்மாவும் ஏற்காது : ஈபிஎஸ் மீது ஓபிஎஸ் தரப்பு சாடல்

கடந்த 2014-ம் ஆண்டு பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அ.தி.மு.க. சார்பில் வழங்கினார்.
இந்த தங்க கவசத்தை, ஒவ்வொரு தேவர் ஜெயந்தி விழாவுக்கும் அ.தி.மு.க. பொருளாளர் மற்றும் பசும்பொன் தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் ஆகிய 2 பேரும் கையெழுத்திட்டு, மதுரை வங்கி லாக்கரில் இருந்து எடுத்துச் செல்வதும் பின்னர் விழா முடிந்ததும் வங்கியில் வந்து ஒப்படைப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது.
அ.தி.மு.க.வில் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ. பன்னீர்செல்வத்துக்கும் இடையே தலைமை யுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், இரு தரப்பிலும் தங்க கவசத்தை பெறுவதற்கு வங்கியில் கடிதம் அளித்துள்ளனர்.
இந்த நிலையில், பசும்பொன் நினைவிட காப்பாளர் டிரஸ்டி காந்தி மீனாளின் ஒப்புதல் கடிதமும் இந்த விஷயத்தில் தேவைப்படுவதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் பசும்பொனில் உள்ள காந்தி மீனாளை சந்தித்து ஒப்புதல் கடிதம் பெற முயற்சித்து வருகிறார்கள்.
காந்தி மீனாள் உறுதியளிக்காததால், முன்னாள் அமைச்சர்கள் ஏமாற்றத்துடன் பசும்பொன்னில் இருந்து புறப்பட்டனர். தங்க கவச விவகாரத்தில் காந்திமீனாள் அ.தி.மு.க.வில் எந்த தரப்பிற்கும் ஒப்புதல் கடிதம் கொடுக்க விரும்பவில்லை என்று தெரிகிறது.
இந்த பிரச்சினையில் வங்கி நிர்வாகமே இறுதி முடிவு எடுக்கட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. தேவர் ஜெயந்தி கொண்டாட்டத்துக்கு இன்னும் 2 வாரங்களே உள்ளதால் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வங்கி நிர்வாகத்திடம் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.
தங்க கவசம், மாவட்ட கலெக்டர் வசம் ஒப்படைக்கும் பட்சத்தில், வருகிற 25-ந்தேதி ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் மற்றும் மதுரை மாவட்ட கலெக்டர் ஆகிய 2 பேரும் வங்கிக்கு வரவழைக்கப்பட்டு, அவர்கள் வசம் தங்க கவசம் ஒப்படைக்கப்படும்.
பின்னர், பலத்த பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டு, பசும்பொனில் உள்ள தேவர் நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு பொருத்தப்படும்.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக செய்தித் தொடர்பாளருமான கவிஞர் மருது அழகுராஜ், வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :
தனது அரசியல் அபகரிப்புக்காக எஃகு கோட்டையாக திகழ்ந்த அண்ணா தி.மு.க வை சுக்குச் சுக்காக நொறுக்க முயற்சிக்கும் இடி அமீன் எடப்பாடி, அடுத்ததாக அக்டோபர் முப்பது குருபூஜையை முன் வைத்து முக்குலத்து சமுதாயத்திடமும் குறிப்பாக, அப்பழுக்கற்ற தேசியத் தலைவர் பசும்பொன் தேவர் திருமகனாரை உளமார வணங்கும் சமூகங்களிடையேயும் மோதலையும் பிளவையும் உருவாக்க பார்க்கிறார்.
புரட்சித் தலைவி அம்மா அவர்கள், பசும்பொன் திருமகனாருக்கு அதிமுக சார்பில் ஆண்டுதோறும் குருபூஜை திருநாளில் அணிவிப்பதற்காக வழங்கிய தங்க கவசத்தை, இன்று வரை தேர்தல் ஆணைய பதிவுகளில் அதிமுகவின் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளராகவும் பொருளாளராகவும் இருந்து வரும் ஓ.பி.எஸ்.க்கே அந்த உரிமை இருந்து வரும் நிலையில்,
அத்துமீறி ஜனநாயகத்திற்கு புறம்பாக, தான் நியமித்திருக்கும் தனது முகவர்களிடமும் முட்டுத்தாங்கிகளிடமும் முத்துராமலிங்கத்தேவர் ஐயாவுக்கான தங்க கவசம் அணிவிக்கும் பொறுப்பை தர வேண்டும் என எடப்பாடியின் ஏவல் ஆட்கள் முரண்டு பிடித்து வருவது, குருபூஜை நிகழ்வின் புனிதத்தையும் அமைதியையும் திட்டமிட்டு கெடுக்க முயற்சிக்கும் நரி சூழ்ச்சியாகும்.
இதனை, தான் வாழும் காலமெல்லாம் துரோகத்தை சாடிய பசும்பொன் ஐயாவின் ஆன்மாவும் ஏற்காது.
மேலும், தங்க கவச உரிமை குறித்து, தங்கள் தரப்பு நியாயத்தை நிலைநாட்ட முன்னாள் மக்களவை உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் சையதுகான் மற்றும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினர் தருமர் என சகல சமூகங்கள் சார்ந்தவர்களையும் கொண்டு, உரிய முன்னெடுப்புகளை ஓ.பி.எஸ் மேற்கொண்டு வரும் நிலையில்...
எடப்பாடியோ திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர் செல்லூர் ராஜூ, ஓ.எஸ்.மணியன் ராஜன் செல்லப்பா என ஒரே அடையாளத்திலான ஆட்களை அனுப்பி... எக்குலமும் ஏற்றுப் போற்றுகிற விடுதலைப் போராட்ட தியாகத் திருமகனாரின் விரிந்து பரந்த புகழின் மீது, ஒரு குறுகிய நிழலை படர வைக்க எடப்பாடி மேற்கொண்ட சூழ்ச்சியே இது என்பதை தேவரய்யாவின் திருவடியையும், அவர்தம் திருத்தலத்தின் திருநீரையும் பூசித்தும் யாசித்தும் வாழும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
எனவே, புரட்சித் தலைவரும் புரட்சித்தலைவியும் உயிராக வளர்த்த இயக்கத்தை பூகோள ரீதியாகவும் மண்டலங்களாகவும் உடைத்து வரும் எடப்பாடி, அக்டோபர் முப்பது குருபூஜை வழிபாட்டு வைபவத்தையும்
ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் பிளவுக்கான களமாக மாற்ற முயற்சிப்பதை, ஐயா தேவர் திருமகனாரை நேசிக்கும் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே அனைவரது வேண்டுகோளாகும்.
இவ்வாறு அதிமுக செய்தித் தொடர்பாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
........