ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கு, காவல்துறை சம்மன்

opseps1

சென்னையில், கடந்த 11-ம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்ற நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடும் மோதல் ஏற்பட்டது. 

எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு இடையே நடந்த இந்த மோதலில், பலர் காயமடைந்தனர். 

இந்த மோதலைத் தொடர்ந்து, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். கலவரத்தில் ஈடுபட்டோர் மீது ராயப்பேட்டை போலீசார் 3 வழக்கு பதிவு செய்தனர். 

ஒன்று, தாமாக முன்வந்து ஓபிஎஸ் தரப்பில் 200 பேரும், ஈபிஎஸ் தரப்பில் 200 பேரும் என மொத்தம் 400 பேர் மீது வழக்கு பதிவு செய்தார்கள். 

அதன் பின்னர், ஓபிஎஸ் தரப்பினர் அளித்த புகாரின்பேரில் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மீதும், ஈபிஎஸ் தரப்பினர் அளித்த புகாரின்பேரில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

இந்த வழக்குகளில் 14 பேர் மட்டும் கைது செய்யப்பட்ட நிலையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டோர் யார் யார் என்பதை கண்டறிவதற்காக, அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் வீடியோ காட்சிகளை வைத்து 3 தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினார்கள். 

இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக நாளை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஆஜராகும்படி ஓபிஎஸ் ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நாளையும், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் நாளை மறுநாளும் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று வரை சுமார் 30 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

அவர்களிடம் நடத்தப்படும் விசாரணை விவரங்கள், வீடியோ மூலமாகவும் வாக்குமூலமாகவும் பதிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
*

Share this story