நடிகர் பவன் கல்யாணின் வாகனத்திற்கு, ஒய்.எஸ்.ஆர். காங்கிரசார் எதிர்ப்பு
 

By 
pawan

ஆந்திராவில் வர உள்ள சட்டசபை தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க, அரசியல் கட்சியினர் பல்வேறு யூகங்களை வகுத்து வருகின்றனர். ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பல்வேறு நல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. 

இழந்த ஆட்சியைப் பிடிக்க தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆளும் கட்சியின் குறைகளை பொதுமக்களிடம் கூறி வருகிறார். அவரது மகன் நாரா லோகேஷ் வரும் ஜனவரி மாதம் பாதயாத்திரியை தொடங்கி மாநிலம் முழுவதும் 400 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். 

இதேபோல் ஆந்திராவில் பிரபல நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் ஜனவரி மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக ஐதராபாத்தில் பிரத்யேக சுற்றுப்பயண வாகனத்தை தயார் செய்து வருகிறார். 

ராணுவ வாகனத்தை போல் தயார் செய்யப்படும் இந்த வாகனம் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த வாகனத்தை போட்டோ எடுத்த நடிகர் பவன் கல்யாண் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்தார். இந்த வாகனத்திற்கு வராஹி என பெயரிட்டுள்ளார். 

இதனைக் கண்ட ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆலோசகர் ராமகிருஷ்ணா ரெட்டி கூறுகையில்:-

நடிகர் பவன் கல்யாண் தயார் செய்யப்படும் வாகனம் ராணுவத்தினர் மட்டும் பயன்படுத்தக்கூடிய பிரத்யேக வாகனமாகும். இந்த வாகனத்தை தனி நபர்கள் யாரும் பயன்படுத்தக்கூடாது. நடிகர் பவன் கல்யாண் வேறு வாகனத்தை வேண்டுமானால் பயன்படுத்தலாம். 

ராணுவத்தினர் பயன்படுத்தக்கூடிய வாகனத்தை அனைவரும் பயன்படுத்தினால் அவர்களுக்கும் சாதாரண மக்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விடும். இதனால் நாட்டில் பல்வேறு குழப்பங்கள் நேரிடும். 
எனவே இந்த பிரசார வாகனத்தை பவன் கல்யாண் ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தார். 

இதே கருத்தை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்து வருவதால் ஆந்திராவில் பரபரப்பு நிலவி வருகிறது.
 

Share this story