எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துவிட்டதா?

epsadmk

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்தும், பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்க கோரியும் ஓ.பன்னீர் செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கும் இன்னும் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், அ.தி.மு.க.வின் வரவு கணக்கு தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இடைக்கால அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று குறிப்பிடப்பட்டு 2021-2022ம் ஆண்டுக்கான அ.தி.மு.க. வரவு செலவு கணக்கு தேர்தல் கமிஷனில் சமர்ப்பிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி அனுப்பிய இந்த வரவு செலவு கணக்கை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது.

செப்டம்பர் 29-ந்தேதி இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த வரவு செலவு கணக்கை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளார். அவர் அனுப்பிய ஆவணங்கள் ஏற்கப்பட்டுள்ளன. அந்த வரவு செலவு கணக்குகள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

அதாவது வருமானவரி கணக்கும் எடப்பாடி பழனிசாமி பெயரிலேயே செலுத்தப்பட்டு அதன் நகல் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு உள்ளது. இதன்மூலம் எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துவிட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இந்த வரவு செலவு கணக்கு பதிவேற்றம் என்பது எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தங்களது வாதத்தை கோர்ட்டில் எடுத்து வைக்க சாதகமாக அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.

Share this story