கவர்னர் பேச்சுக்கு, உடனடியாக ஸ்டாலினால் எப்படி பதிலடி கொடுக்க முடிந்தது? : பின்னணி தகவல்கள்..
 

By 
assembly3

தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக 'கவர்னர் உரை' விவாதத்துக்கு உரியதாக மாறி இருக்கிறது. பொதுவாக சட்டசபையில் கவர்னர் உரை நிகழ்த்தினாலும் அந்த உரையை தயார் செய்வது ஆட்சி செய்யும் அரசுதான். அரசாங்கம் சார்பில் என்ன தயாரித்து கொடுக்கப்படுகிறதோ அதை கவர்னர் பொறுப்பில் இருப்பவர்கள் வாசித்துவிட்டு சென்று விடுவார்கள். இது மரபு.

ஆனால் இந்த மரபை முதல் முறையாக உடைத்திருக்கிறார் கவர்னர் ஆர்.என்.ரவி. கடந்த 5-ந்தேதி அவரிடம் தமிழக அரசு தயாரித்த கவர்னர் உரை வழங்கப்பட்டது. அதை படித்துப் பார்த்த கவர்னர் 6 இடங்களில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் அப்படி எந்த ஒரு பரிந்துரையையும் கவர்னர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை என்று தமிழக அரசு சொல்கிறது.

ஆனால் திருத்தம் செய்ய சொன்னதற்கு தங்களிடம் ஆதாரம் இருப்பதாக கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சர்ச்சைக்கு இடையில்தான் கவர்னர் உரையில் திருத்தம் செய்யப்படவில்லை என்பதை அறிந்த கவர்னர் 6 இடங்களில் சில பத்திகளை வாசிப்பதை தவிர்த்தார். அதற்கு உடனடியாக அரசு தரப்பில் இருந்து பதிலடி கொடுக்கும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினார்.

கவர்னருக்கு அவர் முன்னிலையிலேயே முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினால் எப்படி பதிலடி உடனடியாக கொடுக்க முடிந்தது? என்று அரசியல் நிபுணர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினார்கள். கவர்னர் இப்படித்தான் நடந்து கொள்வார் என்று தி.மு.க. தலைவர்கள் எதிர்பார்த்தார்களா? அதை எதிர்கொள்ளும் வகையில் ஏற்கனவே தீர்மானத்தை தயாரித்து வைத்திருந்தார்களா? என்ற கேள்வி எல்லோரது மனதிலும் எதிரொலித்தது. ஆனால் இதன் பின்னணியில் என்னென்ன நடந்தது என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

கவர்னருக்கு உடனடியாக பதிலடி கொடுத்த விவகாரத்தில் செயல்பட்டது அமைச்சர் துரைமுருகன் ஆவார். கவர்னர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்கத் தொடங்கியதில் இருந்து அவர் கூர்ந்து கவனித்துக் கொண்டே இருந்தார். தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த அறிவிப்புகளை அவர் சரியாக சொல்கிறாரா? என்று வரிக்கு வரி பார்த்துக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் திராவிட மாடல், சட்டம் ஒழுங்கு போன்றவைகளை கவர்னர் தவிர்த்துவிட்டு செல்வதை அவை முன்னவரான துரைமுருகன் கண்டுபிடித்தார். அடுத்த வினாடி அவர் கொஞ்சம் கூட யோசிக்கவில்லை. உடனடியாக எழுந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சென்று ஏதோ பேசினார்.

பிறகு சபையில் இருந்து எழுந்து வெளியில் சென்றார். சட்டசபை அதிகாரிகளை சந்தித்து பேசிவிட்டு மீண்டும் இருக்கைக்கு திரும்பினார். இந்த இடைப்பட்ட நேரத்தில்தான் கவர்னருக்கு பதிலடி கொடுக்கும் தீர்மானம் மின்னல் வேகத்தில் தயாரானது. சபை விதி 17ஐ தளர்த்தி தீர்மானம் கொண்டுவர தீர்மானித்து அதற்கேற்ப 2 பக்க அறிக்கை தயாரிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த நிகழ்வுகள் எதையும் அறியாத கவர்னர் ஆர்.என். ரவி தனது உரையை 10.48 மணிக்கு முடித்தார். அடுத்து எழுந்து சபாநாயகர் கவர்னர் உரையை தமிழில் வாசிக்கத் தொடங்கினார். 11.31 மணிக்கு சபாநாயகர் வாசித்து முடித்தார். இதற்கிடையே துரைமுருகனால் தயாரிக்கப்பட்ட தீர்மானம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வசம் கொடுக்கப்பட்டு இருந்தது.

சபாநாயகர் வாசித்து முடித்ததும், இருக்கையில் இருந்து எழுந்து மு.க.ஸ்டாலின் அந்த 2 பக்க தீர்மானத்தை படித்து தமிழக அரசு தயாரித்த கவர்னர் உரையை முழுமையாக சபை குறிப்பில் இடம்பெற செய்தார். வழக்கமாக கவர்னர் உரை முடிந்ததும், தேசிய கீதம் பாடப்பட்டு கவர்னர் வழியனுப்பி வைக்கப்படுவார்.

வழக்கத்துக்கு மாறாக முதல்-அமைச்சர் பேசியதும், எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி உஷாரானார். அவர் இதை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்தார். அதன் பிறகு தான் கவர்னருக்கு ஏதோ மாற்றம் நிகழ்வதை உணர்ந்தார். தனது உதவியாளர்களிடம் கேட்டு தனக்கு எதிராக தீர்மானம் வருவதை அறிந்தார். அதன் பிறகு தேசியகீதம் பாடுவதற்குகூட காத்திருக்காமல் சபையில் இருந்து வெளியேறினார்.

Share this story