அப்பா இல்லாத இடத்தில் அண்ணனை பார்க்கிறேன் : கனிமொழி உருக்கம்..

By 
kani

தி.மு.க. பொதுக்குழுவில் கட்சியின் துணை பொதுச் செயலாளராக கனிமொழி எம்.பி. தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுக்குழுவில் அவர் ஏற்புரை நிகழ்த்தினார். அப்போது கனிமொழி பேசியதாவது:-

இந்த இயக்கத்தை கட்டி எழுப்பி உருவாக்கிய அண்ணா ஏற்றிருந்த பொறுப்பை, கலைஞர் ஏற்றிருந்த பொறுப்பை இன்று 2-வது முறையாக தளபதி ஏற்று எங்களை வழி நடத்திக்கொண்டு இருக்கிறார்.

கலைஞருக்கு பிறகு தி.மு.க.வில் வெற்றிடம் உருவாகிவிடும் என்று பல பேர் சொன்னார்கள். வெற்றிடம் உருவாக வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். நம்முடைய பரம்பரை பகைவர்கள் கனவு கண்டார்கள். நமது கொள்கைகளுக்கு எதிராக ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிவிடலாம் என்று நினைத்தார்கள்.

ஆனால் அந்த சாம்ராஜியங்களை எல்லாம் தகர்த்து எறியக்கூடிய வகையில் அந்த வெற்றிடத்தை ஆழிப்பேரலையாக அவர்களை அழிக்கக்கூடியவர்களில் ஒருவராக தளபதி எழுந்து நின்று காட்டினார். அவர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இந்த இயக்கத்தை தொடர்ந்து வெற்றிப்பாதையில் அழைத்து சென்று கொண்டிருக்கிறார்.

இங்கு இருக்கும் பெண்களுக்கு சம உரிமை உருவாக்கக்கூடிய ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி நடைபெறுகிறது. ஆனால் அந்த பெண்களை மீண்டும் வீட்டுக்கு அனுப்பி சமையல் அறையில் அடைக்க வேண்டும் என்று சனாதன சக்திகள் திட்டமிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். தளபதி முன்னால் இன்று இருக்கும் போராட்டம் என்பது வெறும் அரசியல் போராட்டம். வெற்றிக்கான போராட்டம் இல்லை. இது நம் கொள்கைக்கான போராட்டம்.

நம் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கான போராட்டம். நமது சுய மரியாதைக்கான போராட்டம். அந்த போராட்டத்தில் தளபதியுடன் பணியாற்றுவதற்கான வாய்ப்பை எனக்கு அளித்ததற்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

அப்பா இல்லாத இடத்தில் கலைஞர் இல்லாத இடத்தில் உங்களை இந்த நாடு வைத்து பார்க்கிறது. போற்றுகிறது. அப்பா இல்லாத இடத்தில் அண்ணா நான் உங்களை வைத்து பார்க்கிறேன்.

நீங்கள் எடுத்து வைக்கும் அடிகள், உங்களின் போராட்டங்கள் அத்தனையிலும் உங்கள் பின்னால் அணிவகுக்க தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். கனிமொழி பேசும்போது மிகவும் உருக்கமாக பேசினார். அவர் தனது பேச்சை முடிக்கும்போது கண்கலங்கினார்.

Share this story