இடிஅமீன் எடப்பாடியின் கர்வமும், கரன்சிவெறி அதர்மும் முடிவுக்கு வரும் : ஓபிஎஸ் தரப்பு சுத்தியல் அடி 

marudhu37

'இடி அமீன் எடப்பாடியின் நெறி கெட்ட அரசியலின் மீது, விரைவில் மாட்சிமை மிக்க நீதிமன்றத்தின் சுத்தியல் அடி ஓங்கி விழும் என ஒவ்வொருவரும் உளமார எதிர்பார்க்கிறார்கள்' என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக செய்தித் தொடர்பாளருமான கவிஞர் மருது அழகுராஜ் கூறியுள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

ஒரு சதவீதம் கூட நீக்கப்பட்டவர்களை சேர்த்துக்கொள்ள வாய்ப்பு இல்லை என்று, அரை சதவீதம்கூட அண்ணா திமுக.வை வழி நடத்தும் வாய்ப்பும், தலைமைப் பண்பும் இல்லாத எடப்பாடி, ஏதோ தன்னை சர்வாதிகார நாட்டின் ராணுவத்தளபதி போல் கற்பனை செய்துகொண்டு ஆணவம் கொப்பளிப்பது வெட்கக் கேடு.

வாய்க்கால் வரப்பு சண்டையில், குத்துக்கோல் பிடித்து கொலைக்குற்றத்தில் சிக்கி, அதற்காக சிறைவாசம் வரை அனுபவித்தவர். அதே வன்மம் நிறைந்த தனது வாழ்வியல் முறையை, அரசியலிலும் நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறார்.

ஜனநாயகத்தை அனுமதிக்க முடியாது என புரட்சித் தலைவர் வகுத்த கட்சிக்கான சட்ட விதிகளை எல்லாம் தான் அணிந்துகொள்ளும் சட்டை என்பதாக கருதிக்கொண்டு, தன் அளவுக்கு ஏற்றாற்போல் வெட்டி ஒட்டி,
பைத்தியக்காரன் கிழித்தது கோவணத்துகும் ஆகாது என்னும் பழமொழிக்கு சாட்சியாக இருக்கிறார்.

முப்பத்து மூன்று வருடங்கள் தன்னலம் பாராது, தன் உடல் நலம் பேணாது, கழகமே உலகமென வாழ்ந்த புரட்சித்தலைவி அம்மாவை நிரந்தர பொதுச்செயலாளர் பதவியிலிருந்தே நீக்குகிறார்.

நாலரை வருடங்கள் ஆட்சியை நடத்தி முடிக்க, பக்கத் துணை நின்றவரும்.. மூன்று முறை முதலமைச்சராக.. எதிர்கட்சித் தலைவராக.. அவை முன்னவராக.. பதினேழு கோடி ரூபாய் இருப்பு என்றிருந்த கட்சியின் நிதி நிலையை இருநூற்று நாற்பத்தெட்டு கோடி ரூபாய் வைப்பு நிதி என்னும் அளவுக்கு, கட்சியின் நிதிஆதாரத்தை அம்மாவின் வழிகாட்டுதலோடு நிலைநிறுத்திய கழகத்தின் பொருளாளராக..

இவை யாவிற்கும் மேலாக, பதறாத பண்பாளராக மாற்றுக்கருத்து கொண்டோரையும் மதித்து நடத்துகிற தாயுமானவராக... கழகத்தை அம்மாவிடம் பயின்ற பாடங்களால் கடுகளவும் பீடுநடை குன்றாது, கட்சிக்கு மாண்பு சேர்க்கும் தலைவராக திகழும் ஓ.பி.எஸ்.ஸை,

தனது டெண்டர் அணியை கூட்டி வைத்துக்கொண்டு, கட்சியிவிருந்து நீக்கிவிட்டேன் என்று கொக்கரிப்பதும், ஒரு சதவீதம் கூட  மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ள வாய்ப்பில்லை என்று, தனது சம்பந்தி தங்கமணி கூட்டிய நாமக்கல் கூட்டத்தில் நின்றுகொண்டு, நாச்சவடால் அடிப்பதும் என..  

இடி அமீன் எடப்பாடியின் மனநோயாளிதனத்தை, மக்களும் மனச்சாட்சி கொண்ட தொண்டர்களும் அருவருப்போடே பார்க்கிறார்கள்.

அவரது நெறி கெட்ட அரசியலின் மீது, விரைவில் மாட்சிமை மிக்க நீதிமன்றத்தின் சுத்தியல் அடி ஓங்கி விழும் என ஒவ்வொருவரும் உளமார எதிர்பார்க்கிறார்கள்..

அது நடந்தேறும் என்பது நிச்சயம். அந்நாளில், எடப்பாடியின் கர்வமும் கரன்சிவெறி அதர்மும்
முடிவுக்கு வரும் என்பது சத்தியம்.

இவ்வாறு அதிமுக செய்தித்தொடர்பாளர்  கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

Share this story