ஓபிஎஸ் கேட்டிருந்தால், உரிய பாதுகாப்பு கொடுத்திருக்கலாம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தி.மு.க. சார்பில், விழிப்புணர்வு மராத்தான் போட்டி இன்று நடைபெற்றது.
அதனை மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
பின்னர், சங்கரன்கோவில் முதல் குருக்கள்பட்டி வரை 11 கிலோ மீட்டர் மராத்தானில் பங்கேற்று ஓடினார். இதைத்தொடர்ந்து சங்கரன்கோவில் அருகே உள்ள ஆராய்ச்சி பட்டிக்கு சென்றார்.
அங்கு புற்றுநோயால் 2 பேர் இறந்தனர். அதற்கு அங்குள்ள மண், சுகாதாரமற்ற முறையில் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், அங்குள்ள மண் மற்றும் தண்ணீரை மருத்துவ குழுவினருடன் சென்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவரிடம் அ.தி.மு.க. பொதுக்குழுவிற்கு சென்ற ஒரு தரப்பினர் தலைமை கழகத்திற்கு சென்று, சூறையாடி தகராறில் ஈடுபட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மா.சுப்பிரமணியன் கூறியதாவது :
ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. தலைமை கழகத்திற்கு செல்வது குறித்து, முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை.
முன்பே பாதுகாப்பு கேட்டிருந்தால் நடவடிக்கை எடுத்திருப்போம்.
வானகரம் செல்வதற்கு முன்பாக, அவ்வை சண்முகம் சாலை தலைமை கழகத்திற்கு செல்வதாக ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் முன்கூட்டியே தகவல் தெரிவித்திருந்தால் நடவடிக்கை எடுத்திருக்கலாம்' என்றார்.
*