ஈரோடு தொகுதியில், ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவரில், பாஜகவின் ஆதரவு யாருக்கு?

bjp44

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே பா.ஜனதா சார்பில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் தொகுதியில் தீவிர கள ஆய்வு செய்து அந்த அறிக்கையை மாநில தலைமைக்கு அனுப்பி வைத்தனர்.

அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுகிறார். ஓ.பன்னீர்செல்வமும் வேட்பாளர் நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து 2 அணியினரும் பா.ஜனதா தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கேட்டனர். 2 அணிகளும் போட்டியிட விரும்புவதால் பா.ஜனதாவே தேர்தலில் போட்டியிடும் என்றும் கூறப்பட்டது. ஆனால் பா.ஜனதா இதுவரை தனித்து போட்டியா அல்லது யாருக்கும் ஆதரவா? என்பதை தெரிவிக்காமலேயே உள்ளது.

ஆனாலும் பா.ஜனதாவின் நிலைப்பாட்டை எதிர்பார்க்காமல் அ.தி.மு.க.வில் வேட்பாளர் தேர்வு தீவிரமாக நடந்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருமே ஆதரவு கேட்பதால் பா.ஜனதா தேர்தலில் போட்டியிடாமல் நடுநிலை வகிக்கும் என்று கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் ஈரோடு இடைத்தேர்தலை கருத்தில் கொள்ளாமல் பாராளுமன்ற தேர்தல் பணிகளில் பா.ஜனதா முனைப்பு காட்டி வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்தால், ஓ.பி.எஸ். கோபித்து கொள்ள வாய்ப்பு உள்ளது. இதனால் பா.ஜனதாவுக்கு யாரை ஆதரிப்பது என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

2 பேரும் தேவை என்ற அடிப்படையில் பா.ஜனதா கட்சி நடுநிலை வகிக்கவே வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக இறுதி முடிவெடுத்து பாரதிய ஜனதா கட்சி இன்னும் சில தினங்களில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடலாமா? என்பது பற்றியும் அக்கட்சி ஆலோசித்து வருகிறது. 

Share this story