தமிழகத்தில், இரட்டைப்பாதை ரயில்வே திட்டம் செயல்படுத்தப்படும் : வைகோ கேள்விக்கு, மத்திய அமைச்சர் தகவல்

By 
rail3

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, ஒன்றிய ரயில்வே அமைச்சரிடம் கேட்ட கேள்வியின் விவரம் வருமாறு:

ஒற்றை வழிப் பாதைகளின் காரணமாக, நாள்தோறும் 15 முதல் 45 நிமிடங்கள் வரை ரயில்கள் தாமதமாக வருகின்றனவா? 

'தமிழ்நாட்டில் பல்வேறு ரயில்வே கோட்டங்களில் உள்ள ஒற்றை வழிப் பாதைகளின் எண்ணிக்கையைக் கண்டறிய ரயில்வே ஏதேனும் கணக்கெடுப்பு நடத்தியதா? 

அப்படிப்பட்ட ரயில் நிலையங்களில், குடிநீர் வசதிகள், வாகன நிறுத்துமிடம் இல்லாமை, சுகாதாரமற்ற கழிவறைகள், போதிய பணியாளர்கள் இல்லாதது போன்ற அடிப்படைக் கட்டமைப்புப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதா?

அவ்வாறாயின், நிலைமையை மேம்படுத்துவதற்கும், எதிர்காலத்தில் இரட்டைப் பாதையை உருவாக்குவதற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்கள் என்ன? 

வைகோவின் மேற்கண்ட கேள்விகளுக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் 29.07.2022 அன்று அளித்துள்ள பதில் வருமாறு :

ஒற்றை வழிப் பாதைப் பிரிவுகளில் இயக்கப்படும் ரயில்கள் உட்பட 

இந்திய ரயில்வேயில் உள்ள ரெயில்கள், அனுமதிக்கப்பட்ட வேகத்தில் பட்டியலிடப்பட்டு, அதற்கேற்ப ரயில்கள் இயக்கப்படுகின்றன. எனவே, ரயில்களின் ஒற்றைப் பாதை என்பது காரணமாக இருக்க முடியாது. 

ரயில்வே திட்டங்கள் பல்வேறு மாநில எல்லைகளில் பரவி இருப்பதால், ரயில்வே திட்டங்கள் மண்டல வாரியாக ஒப்புதல் கொடுத்து எடுக்கப்படுகின்றன. 

திட்டங்களின் வருமானம், நெரிசலான மற்றும் நிறைவுற்ற பாதைகளின் அதிகரிப்பு, ரயில்வேயின் சொந்த செயல்பாட்டுத் தேவை, வள ஆதாரங்களின் இருப்பு, 

ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் திட்டம் மற்றும் ஒட்டுமொத்த நிதி ஆதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் இரட்டைப் பாதை அமைக்கப்படுகிறது. 

01.04.2022 நிலவரப்படி, தமிழ்நாட்டில், முழுமையாக அல்லது பகுதியாக 14,190 கோடி ரூபாய் செலவில் மொத்தம் 1234 கி.மீ. நீளமுள்ள 11 இரட்டைப் பாதைத் திட்டங்கள் ரயில்வே ஒப்புதலுடன் செயல்பட இருக்கிறது. 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
*

Share this story