தமிழகத்தில், விரைவில் இலவச மின்சாரம் ரத்து?

By 
elec1

தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தருமபுரியில் பி.எஸ்.என்.எல்.அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான கே.பி.அன்பழகன் பேசியதாவது:- கடந்த 10 வருடங்களாக ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆட்சி காலத்தில் மின்கட்டணம் உயர்த்தப்படவில்லை.

ஆனால் தற்போதைய தி.மு.க. ஆட்சியில் மின்கட்டணம், சொத்துவரி என்று ஒவ்வொன்றாக உயர்த்தப்பட்டு வருகிறது. பொய்யான வாக்குறுதிகளை நம்பி தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களித்து ஆட்சியில் அமர வைத்து விட்டனர்.

ஆனால் தருமபுரி மக்கள் ஏமாறவில்லை. இங்குள்ள 5 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணிக்கே வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர். தாலிக்கு தங்கம் திட்டம் மூலம் ஏழை பெண்களுக்கு ரூ.90 ஆயிரம் வரை கிடைக்கும். ஆனால் தற்போது மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டம் மூலம் 3 வருடத்திற்கு ரூ.36,000 மட்டும்தான் கிடைக்கும். ஜெயலலிதா செயல்படுத்திய ஒவ்வொரு நலத்திட்டங்களாக முடக்கி வருகின்றனர்.

விரைவில் 100 யூனிட் இலவச மின்சாரமும் ரத்து செய்யப்படலாம். இவ்வாறு அவர் பேசினார்.

Share this story