பரபரப்பான அரசியல் சூழலில், எம்.ஜி.ஆர். கடிதம் :  மருது அழகுராஜ் வெளியீடு 

 

By 
mgr2

அண்ணா திமுகவில் தொடரும் பரபரப்பான அரசியல் சூழலில், கட்சியின் நிறுவனர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.; 

தனது தொண்டர்களுக்கு, இன்று உணர்ச்சிபூர்வமாக கடிதம் எழுத நேர்ந்தால், இப்படிதான் இருக்கும் என..
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

'எனது ரத்தத்தின் ரத்தமான கழக கண்மணிகளுக்கு...

கணக்கு கேட்டு பிறந்த என் கட்சியை, ஒரு களவாணி பய அபகரிக்க பார்க்கிறான்.

வெறும் 26 செயற்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கி, என்னை திமுகவில் இருந்து தீயசக்தி கருணாநிதி நீக்கினார்.

அந்த நிலை, என் கட்சியில் வந்து விடக்கூடாது என்பதற்காகத் தான், கட்சியின் தலைமையை தொண்டர்கள் மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என்பதை கட்சியின் மாற்றவே கூடாத அடிப்படை சட்ட விதியாக உருவாக்கினேன்.

ஆனால், அப்படி நான் வகுத்த மாற்றக்கூடாத அந்த சட்டவிதியை கம்பராமாயணயத்தை எழுதியது சேக்கிழார் எனச் சொல்லும் ஒரு முட்டாள் மாற்றுவேன் என்கிறான்; என் தொண்டர்களுக்கும்  உரிமை கிடையாது என்கிறான். 

ஒரு தொண்டன் கூட, தலைமைக்கு போட்டியிட முடியும் என்கிற விருப்பத்தை, பத்து மாவட்டச் செயலாளர்கள் முன் மொழியனும்; பத்து மாவட்டச் செயலாளர் வழி மொழியனும் என்றெல்லாம் தனக்கு ஏற்றாற் போல் மாற்றுகிறான்.

என் மனைவி ஜானகி 'மருதநாட்டு இளவரசி' படத்தில் நடித்து, தனது  சம்பளத்தில் வாங்கிய  முதல் சொத்தான ஔவை சண்முகம் சாலை தலைமைக் கழக கட்டிடத்தில் உட்கார்ந்துகொண்டே, என் மனைவி ஜானகியையும் விமர்சிக்கிறான்.

இவை யாவிற்கும் மேலாக, நான் அடையாளம் காட்டிய உங்கள் புரட்சித்தலைவி வசித்த கொடநாட்டில் கொலையும் கொள்ளையும் நடத்துகிறான்.

அதனை, தனியார் பங்களா என்றும் அதற்கு ஏன் அரசு பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என்று கேட்கிறான்.

ஊழல்கள் செய்து குவித்து வைத்திருக்கும் பணத்தைக்கொண்டு, கூலிக்கு மாரடிக்கும் ஒரு கூட்டத்தை குறுநில மன்னர்கள் போல உருவாக்கி வைத்துக் கொண்டு..

பத்தாண்டு காலமாக ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி, பலநூறு கோடிகளுக்கு அதிபதிகளாக உலா வருபவர்களை மாவட்டச் செயலாளர்களாக திரட்டி வைத்துக்கொண்டு,

கட்சிக்காக பிரதிபலன் பாராமல் உழைக்கும் கடைக்கோடி தொண்டர்களை உதாசீனம் செய்கிறான்.

மொத்தத்தில்,  ஏழை எளிய மக்களுக்காக நான் தொடங்கிய எனது கட்சியை, ஒரு குத்துக்கோல் கையில் பிடித்து, கொலைகள் செய்து சிறைக்கு சென்று.. 

பாதை நிலத்தை எழுதிக் கொடுத்து, பாதியிலேயே தப்பித்து வந்த ஒரு பழைய குற்றவாளி அபகரிக்க பார்ப்பதும்..

அதற்கு ஆதரவாக, ஒரு பழைய நீதிபதி தலைமையில் ஒரு கூட்டம் பின் வேலைகள் செய்வதையும் கண்டு  வெட்கப்படுகிறேன். வேதனை கொள்கிறேன்.

உலகில் தவறு செய்கிறவர்கள், அந்த தவறுக்கு உடந்தையாக இருப்பவர்கள், இவர்களையெல்லாம் விட கொடியவர்கள் யார் என்று கேட்டால் அந்த தவறுகளை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பவர்கள் தான்.

அப்படி வேடிக்கை பார்க்கும் கூட்டமாக எனது ரத்தத்தின் ரத்தமான என் தொண்டர்கள் இருந்து விடக்கூடாது.

சகலத்தையும் வென்று காட்டும் சக்தி, சத்தியத்திற்கும் ஜனநாயகத்திற்கும் உண்டு என்பதை உணர்த்துங்கள். தொண்டர்களை மலிவாக எண்ணும் துஷ்டனுக்கு பாடம் புகட்டுங்கள்.

என் கட்சிக்கு நான் வகுத்த மாற்றக் கூடாத கட்டளையை, மாற்றுவேன் என்கிற பழனிச்சாமி என்னும் பைத்தியக்காரனுக்கு பாடம் புகட்டுங்கள்.

ஒரு ஹீரோவாக நான் துவங்கி, ஒரு ஹீரோயினாக உங்கள் புரட்சித் தலைவி வழி நடத்திய இயக்கத்தை, ஒரு வில்லனிடம் விட்டு விடக்கூடாது என்பதில் உறுதியோடு களமிறங்குங்கள்.

என்றும் என் ஆசிகள் உங்களுக்கு துணை நிற்கும்..

இப்படிக்கு : உங்கள் புரட்சித் தலைவர்..

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

*

Share this story