பாமக மீது கே.பி.முனுசாமி பாய்ச்சல்..

By 
kpm

புதுச்சேரியில் நடந்த பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில், அ.தி.மு.க. பிளவுபட்டு கிடப்பதாகவும், பா.ம.க.வுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகவும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

இதற்கு கண்டனம் தெரிவித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "ஜெயலலிதா இல்லையென்றால் பா.ம.க. என்ற கட்சியே வெளியில் தெரிந்து இருக்காது. அ.தி.மு.க. தயவால்தான் பா.ம.க.வுக்கு அங்கீகாரம் கிடைத்தது" என்று கூறி இருந்தார். இதற்கு பதில் அளித்து பா.ம.க. செய்தி தொடர்பாளர் வக்கீல் கே.பாலு நிருபர்களிடம் கூறுகையில்,

"அ.தி.மு.க. 4 பிரிவாக பிரிந்து இருக்கிறது என்று குழந்தைகளுக்கு கூட நன்றாக தெரியும். 1996-ம் ஆண்டு அ.தி.மு.க. பலவீனப்பட்டு கிடந்தபோது அதற்கு உயிரூட்டியதே பா.ம.க.தான். 1998-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க.வுடன் கூட்டணி வைக்காவிட்டால் அ.தி.மு.க. மிகப்பெரிய சரிவை சந்தித்து இருக்கும். பா.ம.க. வுடன் கூட்டணி அமைத்தப் பின் தான் 2001-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியை பிடித்தார்" என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில் இதற்கு பதில் அளித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியதாவது:-

பா.ம.க.வின் கருத்துக்கு பதில் சொல்லி எங்கள் சக்தியையும், நேரத்தையும் வீணடிக்க விரும்பவில்லை. அ.தி.மு.க.வின் லட்சியமே வேறு. நாங்கள் எங்கள் லட்சியத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம்.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் ஏற்கனவே ஜெயலலிதா கைப்பற்றியது போல 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்பது தான் எங்கள் லட்சியம். அ.தி.மு.க. சிதைந்து கிடப்பதாக சிலர் பேசுகிறார்கள். ஆனால் அ.தி.மு.க. வலிமையான கட்சியாக இருக்கிறது என்பதை வருகிற பாராளுமன்ற தேர்தலின் மூலம் தெரியப்படுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.
 

Share this story