ராகுல் நடைபயணத்தில் கமல்ஹாசன்..

padayatra8

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல்காந்தி செப்டம்பர் 7-ந்தேதி பாரத ஒற்றுமை நடைபயணத்தை கன்னியாகுமரியில் தொடங்கினார்.

தற்போது அரியானாவில் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி நாளை மறுநாள் (24-ந்தேதி) டெல்லியில் நடைபயணம் செல்கிறார். இதில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பங்கேற்கிறார். அவருடன் கட்சி நிர்வாகிகள், மற்றும் நூற்றுக்கணக்கான தொண்டர்களும் நடைபயணத்தில் கலந்து கொள்கிறார்கள்.

இதையடுத்து, கமல்ஹாசன் நாளை இரவு டெல்லிக்கு விமானத்தில் புறப்பட்டு செல்கிறார். துணை தலைவர்கள் மவுரியா, தங்கவேல், மாநில செயலாளர்கள் செந்தில் ஆறுமுகம், சிவ இளங்கோ, முரளி அப்பாஸ் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ரெயில், விமானம் மூலமாக டெல்லி செல்கிறார்கள்.

இவர்களில் சிலர் இன்றே புறப்பட்டு டெல்லி சென்று கொண்டிருக்கிறார்கள். பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற கமல்ஹாசன் விரும்புகிறார். இதற்கான அடித்தளமாகவே அவரது டெல்லி பயணம் பார்க்கப்படுகிறது.

டெல்லியில் ராகுலுடன் நடைபயணத்தில் ஒன்றாக செல்லும் அவர், காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் கமல் நெருங்கிய நட்புடன் உள்ளார். டெல்லியில் அவரையும் கமல் சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது.

Share this story